கூட்டணி கலாட்டா-4:
திமுக கூட்டணி குறித்து நாம் விரிவாக கடந்த 3 நாட்களாக பார்த்து வருகிறோம்..இனிமேல் அதிமுக கூட்டணியின் நிலை என்ன, அங்கு எந்தெந்த கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்பது குறித்து அடுத்தடுத்த தொடர்களில் பார்க்கலாம்…
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சொற்ப வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க நேர்ந்தது. தேர்தலில், அதிமுக, திமுக, மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க. என நான்கு முனைப் போட்டி நிலவியது. அதனால் ஒரு விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் திமுக ஆட்சியை இழந்தது என்பதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.
ஆனால், அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட பல கட்சிகள், அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டும், படுதோல்வியைத்தான் சந்தித்தன. மோடி ஆட்சியின் சாதனைகள் என கூறி அதிமுக பாஜக கூட்டணி பிரசாரம் செய்தும், அது மக்களிடையே எடுபடவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவித்தன. இன்றளவும், பாரதிய ஜனதா கட்சி மீது தமிழக மக்களிடையே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நிலைதான் தொடர்கிறது.
ஆனால், தமிழகத்தில் கால் பதித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றும் பாஜக, தேர்தலை சந்திக்க ஏதாவது ஒரு மாநில கட்சியின் மீது சவாரி செய்தால்தான் முடியும் என்பதையும் மறந்துவிட வில்லை. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் ஒரு கட்சி இருக்கிறது என்பதை மக்களிடையே தெரியப்படுத்த வேண்டிய நிலையில் தமிழகத்தில் இருந்து வரும் பாஜக, வலிமையான தலைமையற்ற அதிமுகவை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறது. ஏற்கனவே தனித்து நின்று போட்டியிட்டு நோட்டா பெற்ற வாக்குகளைக்கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பாஜக, மீண்டும் அதுபோல ஒரு முடிவு எடுக்க தயாராக இல்லை. அதனால் ஏதாவது ஒரு மாநில கட்சியின் முதுகில் ஏறித்தான் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மத்தியில் உள்ள ஆட்சி அதிகாரத்தைக்கொண்டு, மிரட்டி, அதிமுக அரசை தனக்கு சாதகமாக பாஜக பயன்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் தொடர்ச்சிதான், சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவை மறைமுகமாக மிரட்டி, அதிக தொகுதிகளை பெற்று வெற்றிபெறுவோம் என்ற ஆசையில் களமிறங்க தயாராகி உள்ளது.
பாஜகவை தோளில் சுமக்க திமுக தயாரில்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், வேறுவழியின்றி அதிமுகவை அதிகார பலத்தைக்கொண்டு மிரட்டி குனிய வைத்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி என்று தமிழக மாநில தலைவர் முருகன் அறிவித்திருந்தாலும், அதைத் தொடர்ந்து, செய்தியாளரிடம் பேசிய பாஜக துணைத்தலைவர் விபி துரைசாமி, தமிழக தேர்தலில் போட்டியே திமுகவும் பாஜகவுக்கு தான். அதிமுக ஒரு பொருட்டல்ல என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என ஒருமித்து அறிவித்த நிலையில், அதை ஏற்க மறுத்து பாஜக பிரச்சினைகளை ஏற்படுத்தியது. தேசிய கட்சியான நாங்கள்தான், கூட்டணிக்கு தலைமை வகிப்போம் என்று நையாண்டி செய்தது. இருந்தாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது, அதிமுக- பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் அவர் முன்னிலையில் அறிவித்து சரணாகதி அடைந்தனர். அதைத்தொடர்ந்து, அமித்ஷாவுடன் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை பேசி முடிவு எடுத்துக் கொள்ள அமித்ஷா அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை ஒதுக்க பாஜக தலைமை வலியுறுத்தி வருவதாகவும், ஆனால், அதிமுக தலைமையோ, 20 முதல் 25 வரை தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரு கட்சிகளுக்கு இடையே சலசலப்பு நீடித்து வருகிறது.
பாஜகவின் நடவடிக்கைகளைக் கண்டு பல அதிமுக தலைவர்கள், தங்களது குமுறலை வெளிப்படையாக கூறி வந்தாலும், தைரியமாக முடிவு எடுக்க அதிமுகவின் இரட்டை தலைமை தயங்கி வருகிறது என்பதே உண்மையான நிலவரம்.
இதுபோன்ற நிலையில், இருதலைக்கொள்ளி எறும்பாக சிக்கி தவிக்கும் அதிமுவிடம், பாஜக மட்டுமின்றி, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் தங்களது வீரத்தை காட்டி வருகின்றன.
ஜெ.மறைவுக்கு பிறகும், எதிர்க்கட்சி, கூட்டணி கட்சிகளின் சலசலப்புகளுக்கு இடையே பதவிகாலத்தை நிறைவு செய்துள்ள அதிமுகவை, பாமக தலைவர் ராமதாஸ் இடஒதுக்கீடு போராட்டம் என்ற பெயரில் வன்முறையை ஆரம்பித்து, தேர்தலில் தங்களுக்கு அதிக தொகுதி ஒதுக்க வேண்டும் என்றும் மிரட்டி வருகிறார். ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டும் அதிமுக, வர இருக்கும் தேர்தலில் குறைந்த தொகுதிகளையே ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இடஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லையென்றால், அ.தி.மு.க கூட்டணியில் தொடர்வதற்கும் வாய்ப்பில்லை. எங்களின் கோரிக்கை நிறை வேற்றப் பட்டால் அ.தி.மு.க-வும் பா.ம.க-வும் வடமாவட்டங்களில் பெரிய அளவில் பலம் பெறும் என்றும், விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வென்றது உள்பட பல தொகுதிகளில் அதிமுக வெற்றிக்கு காரணமாக பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குகளே அமையும் என்று பட்டியலிட்டு மிரட்டி வருகிறது.
அதுபோல, தேமுதிகவும் தங்களுக்கும், பாஜக, பாமகவுக்கு ஒதுக்குவதை விட அதிக தொகுதிகள் வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளது. குறைந்தது 41 தொகுதிகள் வேண்டும் இல்லையேல் 3வது அணி அமைப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தனது பாணியில் மிரட்டி வருகிறது.
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் பிரேமலதா கூறியிருப்பதை திமுக, அதிமுக போன்ற எந்தவொரு கட்சிகளும் கண்டுகொள்ளாத நிலையில், அதிமுக கூட்டணியில், தேமுதிகவுக்கு ஒற்றை இலக்க தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016-ம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியை அமைத்து, தேர்தலை சந்தித்த தேமுதிக சோபிக்க முடியாத நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் குறிப்பிட்ட அளவில் எந்தவொரு முன்னேற்றமும் பெறவில்லை. சுமார் 2.19 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இதை கவனத்தில் வைத்துள்ள அதிமுக தேமுதிகவின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகிறது.
தேமுதிக தலைவர் பேச முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடைபிணமாக காட்சி தரும் நிலையில், அவரது முந்தைய நடவடிக்கைகளைக் கொண்டு, ஆதாயம் தேடும் முயற்சியில், அவரது மனைவியும், மைத்துனரும் ஈடுபட்டு அரசியல் பேரத்தை நடத்தி வருகிறார்கள் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அதிமுகவின் வலிமையற்ற தலைமையை தங்களுக்கு சாதகமாக்க பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் மிரட்டி வருவதும் கூட்டணிகளுக்குள் சலசலப்பை உருவாக்கி வந்தாலும், அதிமுக தலைமை நானும் ரவுடிதான் என்பதுபோன்ற உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே தைரியசாலி போல, 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்போம் என மிரட்டலான தோற்றத்தையே உருவாக்கி வருகிறது…
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் ஏற்படப்போகும் சிக்கல்களைப் பொறுத்தே எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் தொடரும், எந்த கட்சி வெளியேறப்போகிறது என்பது தெரிய வரும்.
இதுபோன்ற சிக்கலில் சிக்கியுள்ள அதிமுக, நாடாளுமன்ற தேர்தலில் இடம்பெற்ற கட்சிகளுடன், சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடருமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
(தொடரும்)
கூட்டணி கலாட்டா -1: கூட்டணி கட்சிகளை வேண்டா விருந்தாளியாக நினைக்கும் திமுக தலைமை…
கூட்டணி கலாட்டா-2: கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைக்க திமுக திட்டமா…?
கூட்டணி கலாட்டா-3: கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரசுக்கு நெருக்கடி…