2021 சட்டமன்றத் தேர்தல் சரியாக இன்னும் 3 மாதங்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலை முன்னிட்டு, அதிமுக, திமுக தலைமையிலான கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பேரங்கள் ரகசியமாக நடைபெற்று வருகின்றன.  கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே, 2021 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்வதாக கட்சிகள் கூறி வருகின்றன. இருந்தாலும், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவோ, அதிமுகவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன. இதற்கு காரணம், கூட்டணி கட்சிகளின் மிரட்டல்கள், தொகுதிப்பங்கீடு சிக்கல்கள்  என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த சூழலில்தான் அதிமுக, திமுக கூட்டணிகளில் சலசலப்பு எழுந்துள்ளது அனைவரும் அறிந்த விஷயம்தான்.  திமுக தலைமையிலான கூட்டணி ஒற்றுமையாக இருப்பதாக வெளியே கூறிக்கொண்டாலும், உள்ளுக்குள் சலசலப்பு எழுந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், சட்டமன்ற தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான்,  கூட்டணி கட்சியினர் திமுக சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்டு வருவதாக கூட்டணி கட்சித்தலைவர்கள் புலம்பி வருகின்றனர். மதிமுக தலைவர் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோர் பகிரங்கமாகவே, தங்களது கட்சி சின்னத்தில்தான் போட்டியிடுவோம், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்  என்று தெரிவித்து உள்ளனர். இது திமுக தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

இந்த சூழலில்தான், தமிழக காங்கிரஸ் தலைமையும், அழையா விருந்தாளியாக திமுகவில் ஒட்டிக்கொண்டுள்ளது. தேசிய கட்சிக்கு உரிய மரியாதையை திமுக வழங்க மறுத்தாலும், வேறுவழியின்றி திமுக தயவில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டு உள்ளது.

2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் தோல்வி  மற்றும் சமீப காலங்களில் நடைபெற்று முடிந்த மாநில சட்டமன்ற தேர்தல்களில் கிடைத்த வாக்குகளை பார்க்கும்போது,   எவ்வளவுதான், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சூறாவளியாக சுற்றி சுற்றி மக்களை சந்தித்தாலும், அதற்கான பலன் கிடைத்துள்ளதா என்பது கேள்விக்குறியே.

கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பீகார் சட்டமன்றதேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.  இதுபோன்ற சூழலை கவனத்தில் கொண்டுள்ள திமுக தலைமை, தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தேவையா என்று சிந்திக்கும் மனநிலைக்கு சென்றுள்ளது.

தமிழக தேர்தல் களம், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், சசிகலாவின் விடுதலை மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது. அதிமுக கொடியுடன் சென்னை நோக்கி பயணமாகி வரும்  சசிகலாவின் வருகையால், அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளிடையே பரபரப்பாக எதிர்நோக்கப் படுகிறது.சசிகலாவின் வருகை திமுகவுக்கு சாதகமாகவே இருக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், அதிமுக தலைமையோ செய்தவறியாமல் திகைத்துப்போய் உள்ளது.

 சசிகலாவின் என்ட்ரி,  அதிமுகவை மீண்டும் சிதற வைக்கும் என்ற நம்பிக்கை திமுக உள்பட சில கட்சிகளிடையே எழுந்துள்ளது. அதனால் திமுகவுக்கே ஆதாயம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள, பாஜகவுக்கு மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தியும் திமுகவின் வெற்றிக்கு சாதமான நிலையை தோற்றுவிக்கின்றன. இதனால்தான், வரஇருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம்தான் வெற்றிபெறுவோம் என்ற இறுமாப்பில் திமுக தலைமை இருந்துவருகிறது.

திமுக தலைவரின் சமீபகால பிரசாரமும், மேடை பேச்சுக்களும் அதை உறுதி செய்கின்றன. 234 தொகுதிகளிலும் நமது வெற்றி உறுதி என கூறும் திமுக தலைவர், இப்போதே, தேர்தலில், திமுக வெற்றிபெற்று, ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட்டது போன்ற கனவில் மிதக்கத் தொடங்கி விட்டாரோ என்று நினைக்கத்தோற்றுகிறது. அதன் எதிரோலியே,  திமுக தலைமை, கூட்டணி கட்சிகளை ஏளனமாக பார்த்து வருகிறது,. சில கூட்டணி கட்சிகள் தானாகவே விலகிச்செல்லுமா என்று எதிர்பார்ப்பதுபோல தெரிகிறது.

 இந்த நிலையில்தான், ராகுலின் தமிழக தேர்தல் பிரசாரம் அறிவிக்கப்பட்டு, அவரும் தமிழகத்தில் வந்து 3 நாட்கள் சுற்றுப்பயணம்  செய்து மக்களை சந்தித்துவிட்டுச் சென்றார். அவரது எளிமையான நடவடிக்கைகள் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பதை மறுக்க முடியாது. ஆனால், கூட்டணி கட்சியான திமுகவோ, ராகுலின் தமிழக வருகையை சிறிதளவுகூட கண்டுகொள்ளவில்லை, ராகுலுக்கு வாழ்த்துச் சொல்லவோ, அவரை சந்திக்கவோ திமுக தலைமை ஆர்வம் காட்ட வில்லை என்பது, காங்கிரஸ் தலைவர்களின் மனதில் நெருடலாகவே இருந்து வருகிறது.

திமுகவின் அலட்சியத்தை, உணர்ந்த ராகுலும் தேர்தல் பிரசாரத்தின்போது, திமுகவையோ, அதிமுகவையோ நேரடியாக விமர்சிப்பதை தவிர்த்து, மக்களிடையே கட்சியைப் பலப்படுத்தும் வகையிலேயே உரையாடி வந்தார்.  கடைசிநாள் பிரசாரத்தின்போது மட்டுமே, தவிர்க்க முடியாத காரணத்தால், கூட்டணி கட்சி சார்பில் முதல்வராக ஸ்டாலினை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இல்லை இல்லை… தெரிவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார் என்றே கூற வேண்டும். கடைசி நாளன்று, அரவக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், திமுக காங்கிரஸ் கூட்டணியில்,  மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம். காங்கிரஸ் – திமுக உறவு வலுவாக உள்ளது. திமுகவுடன் நல்லுறவு தொடர்கிறது என்றவர்,  மறைந்த  கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்றார்.

ராகுலின் கருத்தை மேலோட்டமாக வரவேற்ற ஸ்டாலின், அதுகுறித்து நேரடியாக கருத்து தெரிவிக்காமல், பத்திரிகையில் வந்த செய்தியை சுட்டிக் காட்டியே டிவிட் மூலம் தெரிவித்திருந்தார். இதுவும் அரசியல் விமர்சகர்களால் உற்று நோக்கப்பட்டது.

அதுபோல, புதுச்சேரியில், கவர்னரை எதிர்த்து மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸ்முதல்வர் நாராயணசாமியே நடுரோட்டில் அமர்ந்து தொடர்போராட்டம் நடத்திய போது, அதை முற்றிலுமாக திமுக புறக்கணித்தது.  இதுமட்டுமின்றி, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டு, ஆட்சியை கைப்பற்றும் என பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் தெரிவித்த ஸ்டாலின், நேரடியாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்று தெரிவிக்காமல், தமிழகத்தின் அரசியலை விட புதுச்சேரியின் அரசியல் மாறுபட்டது என்றும், அங்கு கழகத்தை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன,  புதுவையில்  தி.மு.க. சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இது கழகப் பணிகள்தான்; தேர்தல் பணிகள் அல்ல. புதுவை சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் தேர்தல் அறிவிப்பு வெளிவரவில்லை. இதனை கூட்டணியுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம் என நாசூக்காகவே தெரிவித்தார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ, நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம் என்று கூறிக்கொண்டே வருகிறது… இதுபோன்ற கூட்டணி கலாட்டாக்கள் திமுகவில் உள்ள மதிமுக மற்றும்விடுதலை சிறுத்தை கட்சியிலும் தொடர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன…

இரட்டை தலைமைக்கொண்ட அதிமுகவின் பலவீனத்தை தனக்கு சாதகமாக்கி, வெற்றி வாகை சூடலாம் என கனவுகண்டு வரும் திமுக, கூட்டணிக் கட்சிகளை வேண்டா விருந்தாளியாகவே கருதுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்…

கூட்டணி கட்சிகளை திமுக தலைமை மதிக்கத் தவறினால், அதனால் எற்படும் இழப்பு திமுகவிற்கே என்பதை மறந்து விட முடியாது…

(தொடரும்)