'கூட்டணி   பேரம் நடந்தது உண்மையே!” : போட்டு உடைக்கிறார் விஜயகாந்த்

Must read

 a
பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தங்களுடன் கூட்டணி அமைக்கக் கோரி தனக்கு பணம் அளிக்க  முன்வந்ததாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்  அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு விஜயகாந்த் அளித்த பேட்டியில், “ஊழல் புரிந்து நாட்டை  கெடுத்த  அ.தி.மு.க., தி.மு.க கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. தேர்தலுக்கு பிறகும்கூட அக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை.
முதல்வர் வேட்பாளராக  என்னை சொல்லியிருக்காவிட்டாலும் மக்கள் நலக்கூட்டணியுடன் தான் கூட்டணி வைத்திருப்பேன்.
மக்கள் நலக்கூட்டணியினர் இதுவரைக்கும் ஆட்சியமைக்காத  நேர்மையானவர்கள் என்பதாலேயே அவர்களுடன் கூட்டணி அமைத்தேன்.
சட்டமன்றத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி அமைக்கக் கோரி பா.ஜ.க, அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தனக்கு பணம் அளிக்க முன்வந்தன” என்று விஜயகாந்த் தெரிவித்தார்.
இது அரசியல்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, சில கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

  1. அக் கட்சிகள் கூட்டணி அமைக்க பணம் தருவதாக சொல்லியிருந்தன என்றால், அது தொடர்பான ஆதாரங்களை வெளியிடலாமே. நவீன காலத்து செல்போனில் பேச்சுக்களை பதிவு செய்ய முடியும். அதே போல மிகச்சிறிய கேமராக்கலும் வந்துவிட்டன. ஆகவே அந்த பேரங்களை ஒலி, ஒளிப்பதிவு செய்து ஆதாரங்களை வெளியிட்டிருக்கலாமே. ஒருவேளை ஆதாரம் இருக்கிறதா?
  2. பணம் கொடுக்க முன்வந்ததாக இவர் சொல்லும் பா.ஜ.க.வுடன்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது கூட்டணி வைத்திருந்தார் விஜயகாந்த். அதற்கு அக்கட்சி ஏதும் பணம் கொடுத்ததா?
  3. கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே கூட்டணிக் கட்சியான அதிமுகவுடனான உறவை முறித்துக்கொண்டார் விஜயகாந்த். தவிர இந்த சட்டமன்றத் தேர்தலில் (கிட்டதட்ட) தனித்து போட்டி என்ற முடிவில் இருந்தது அ.தி.மு.க.

ஆகவே அக் கட்சி, தன்னுடன் கூட்டணி வைத்துக்கொள்ள பணம் கொடுக்க முன்வந்ததா.. அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பதற்காக பணம் கொடுக்க முன்வந்ததா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் விஜயகாந்த் பதில் அளித்தால் அவரது இமேஜ் உயரும். செய்வாரா?
 

More articles

Latest article