சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புதிய இந்தியா செய்திகள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு என்ற புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற செய்தியாளர்களின் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதே என்று கேள்வி எழுப்பினர். அது  தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்தார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது: தமிழகத்திலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறேன். மற்ற கட்சிகள் எல்லாம் குடும்ப நலம் சார்ந்த கட்சிகள். பாஜக மட்டும் மக்கள் நலன்சார்ந்த கட்சி. நாடு முழுவதும் பாஜகவுக்கு வெற்றி அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கூட்டணி என்று இருந்தால், அதில் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது மரபு. அதிமுக கூட்டணியில் மட்டுமல்ல. எந்த கூட்டணியாக இருந்தாலும் சார்ந்திருக்க வேண்டும் என்று கூறினார்.