மதுரை: எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளே அதிமுக கூட்டணியில் இடம் பெற முடியும் என்று அக்கட்சியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் என கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகின்றன.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பாஜக இன்னமும் அங்கீகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந் நிலையில், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளே அதிமுக கூட்டணியில் இடம் பெற முடியும் என்று அக்கட்சியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எல்.முருகனின் கருத்து அவருடைய சொந்த கருத்தாகும். தமிழகத்தில் அதிமுக தலைமையில் மட்டுமே கூட்டணி. திமுகவின் கிராம சபை கூட்டம் செயற்கையானது. கட்சி கூட்டத்தில் யாரும் பங்கேற்காததால் கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் கூட்டி வருகிறார். திமுகவின் கிராம சபையால் ஒரு பயனும் இல்லை.

எம்.ஜி.ஆர் குறித்து சீமான் தவறாக பேச மாட்டார். உள்நோக்கத்துடன் சீமான் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்கிறார். இனிமேல் விமர்சனம் செய்ய மாட்டார் என நம்புகிறோம். கமல் சிறந்த நடிகரும் இல்லை, சிறந்த அரசியல்வாதியும் இல்லை.

2500 ரூபாய் பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பால் அதிமுகவின் வாக்கு சதவீதம் மேலும் 10 சதவீதம் உயர்ந்து 70 சதவீதம் கிடைக்கும். மு.க.அழகிரி கட்சி துவங்கினால் திமுக பெரிதும் பாதிக்கப்படும். மு.க.அழகிரியால் மற்ற கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் வராது என்று அவர் கூறினார்.