சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களை ராட்சத குழாய்கள் மூலம் இணைக்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் (Chennai Metrowater) திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்த ஆலோசனைகள் மற்றும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்த அறிக்கைகள் பெறப்பட்ட நிலையில் அதனை சரிபார்க்க இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கு (IIT – Madras) அனுப்பியுள்ளது.
ஐஐடி-யின் ஆய்வுக்குப் பிறகு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ள நிலையில் 2005 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் 30 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஒவ்வொரு நீர் ஆதாரத்தில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் வழங்கப்படும் நிலை இருந்து வருகிறது. உதாரணமாக, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை வட சென்னையில் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே நீர் விநியோகம் செய்துவருகிறது. மேலும் ஆலையில் நீர் விநியோகம் குறைந்தால், மாற்று ஆதாரங்களில் இருந்து விநியோகிப்பது சவாலாக இருந்து வருகிறது.
புதிதாக திட்டமிடப்பட்டுள்ள இந்த ரிங் மெயின் அமைப்பு மூலம் எந்த ஒரு நீர் ஆதாரத்தில் இருந்து எந்த ஒரு பகுதிக்கும் தண்ணீரை விநியோகிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
பராமரிப்புக்காக விநியோக வசதி நிறுத்தப்படும்போதோ அல்லது அருகிலுள்ள ஆதாரம் வறண்டுபோகும்போதோ சென்னையின் குடிநீர் தேவையை சிரமமின்றி மேற்கொள்ள இந்த ரிங் மெயின் திட்டம் உதவும்.
இதற்காக 1 மீ முதல் 1.8 மீ வரை விட்டம் கொண்ட ராட்சத குழாய்கள் மூலம் 11 விநியோக மையங்கள் மற்றும் நீர் ஆதாரங்களை இணைக்கும் வகையில் 94.45 கி.மீ. நீளத்துக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 426 சதுர கி.மீ. பரப்பளவு பயன்பெற இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் அடுத்த கட்டமாக, சென்னை பெருநகரப் பகுதிக்கு, 763 சதுர கி.மீ., பரப்பளவில், 107 கி.மீ., நீளத்துக்கு, ₹1,830 கோடி மதிப்பீட்டில், மற்றொரு ரிங் மெயின் சிஸ்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.