சென்னை: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் பேஸ்-2-ல் கட்டப்பட்டு வரும் ரயில் நிலையங்களில் நடைமேடை தடுப்புக் கதவுகள் அமைக்க ரூ.159.97 கோடியில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி 36 ரயில் நிலையங்களில் இந்த தடுப்பு கதவுகள் அமைக்கப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல், வழித்தடம்-3 (சோழிங்கநல்லூர் ஏரி முதல்சிப்காட் 2 வரை) மற்றும் வழித்தடம் 5-ல் (கோயம்பேடு மொத்த சந்தை வளாகம் மெட்ரோ முதல் எல்காட் வரை) ஆகிய இரண்டு உயர்மட்ட வழித்தடங்களில் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் நிலையங்களில், நடைமேடை தடுப்புக் கதவுகள் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் ரூ.159.97 கோடியில் எஸ்டி இன்ஜினியரிங் அர்பன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை மெட்ரோ நிறுவன அலுவலகத்தில், மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் எஸ்டி இன்ஜினியரிங் அர்பன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமசாமி முத்துராமன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதனிடையே, வழித்தடம்-3 மற்றும் வழித்தடம் 5-ல் அமையவுள்ள 36 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் பாதி உயரத்திலான நடைமேடை தடுப்புக் கதவுகள் அமைக்கும் பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உயர்மட்ட வழித்தடங்களில் நடைமேடை தடுப்புக் கதவுகள் அமைப்பதால் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில் இயக்கங்களை இந்த அமைப்பு எளிதாக்கும். மேலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் எனச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.