சென்னை: வைகுண்ட ஏகாதசி அன்று திருவல்லிக்கேணி பாரத்த சாரதி கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கிடையாது என்றும், தமிழக கோவலில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ கோயில்களிலும் வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.  சொர்க்க வாசல் வழியாக வருவதற்கு பெரும்பாலோர் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்வார்கள். மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள பெருமாள் கோவல்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்று, எம்பெருமாள் அருள் பெற்று வருவர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள பிரபல கோவிலான  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரும்  23-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதையடுத்து, கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, பல்வேறு துறை அலுவலர்களுடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு  ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் மேற்கொண்டார்கள். இந்தாண்டு கூடுதலாக 20 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி அன்று கோயிலுக்கு கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுர வாசல் வழியாக சொர்க்க வாசல் சேவைக்கு வருபவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களும் அனுமதிக்கப்படுவார்கள். டி.பி. கோயில் தெரு வழியாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களுக்கு தனி வரிசை இந்தாண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சொர்க்க வாசல் திறப்புக்கு அதிகாலை இரண்டரை மணிக்கு 1,500 பக்தர்களை அனுமதிப்பதென்றும், உபயதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் 850 நபர்களை அனுமதிப்பதென்றும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது. அதன் பிறகு காலை 6 மணி முதல் இரவு நடை மூடுகின்ற வரையில் பொது தரிசனம் தான் இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட இருக்கின்றது.

அன்றைய தினம் சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. கோயில்களில் படிப்படியாக சிறப்பு தரிசனக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். அந்த வகையில், இந்த ஆண்டுவைகுண்ட ஏகாதசிக்கு பார்த்தசாரதி கோயில் சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரத்து செய்கிறோம். இந்தாண்டும் பார்த்தசாரதி கோவிலில் மார்கழி மாதத்தில் இசைக் கல்லூரி மாணவ, மாணவிகளின் திருப்பாவை பாசுரம் நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பார்த்தசாரதி கோவில்  பாதுகாப்பிற்கு, 400 போலீசார் பணியமர்த்தப்பட உள்ளனர். அறநிலைத்துறை சார்பில் கூடுதல், இணை, துணை, உதவிக் கமிஷனர்கள், 150 அலுவலர்கள் பணியமர்த்தப்படுவர் என்றார்.

மேலும், சிதம்பரம் கோவில் தொடர்பான கேள்விக்கு,  சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீதேறி தரிசனம் செய்வதற்கு தடை செய்வதை இந்து சமய அறநிலையத் துறை அனுமதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.