சென்னை: ஈரானில் சிக்கி உள்ள தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்கள் தாயகம் திரும்பும் செய்திக்காக குடும்பத்தினர் காத்திருக்கின்றனர் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக, அங்கு சிக்கியிருக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாயகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 498 மீனவர்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 78 மீனவர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 72 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 3 மீனவர்கள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில் சிக்கித் தவிப்பதாகவும், “அங்கு அதிகரித்து வரும் போர்ச் சூழல் காரணமாக அவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதோடு, தமிழ்நாட்டிற்குத் திரும்ப முடியாமல் உள்ளனர்.
மீனவர்களின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் ஏதும் இல்லாத காரணத்தால், தாயகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். மீனவர்கள் தாயகம் திரும்பும் செய்திக்காக குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். தற்போது அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலையில் சிக்கியுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பிட அரசின் உதவியை குடும்பத்தினர் நாடி இருக்கின்றனர். இந்த மனிதாபிமான விஷயத்தில், ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் விரைவான தலையீடு, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதலைத் தரும்.
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும், அவர்களின் நலனை உறுதிப்படுத்தவும், அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கும் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.