தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் தோண்ட மத்திய நிலக்கரி அமைச்சகம் மார்ச் 29 ம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாநில அரசை கலந்தாலோசிக்காமல் நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் இந்த தன்னிச்சையான அறிவிப்பால் தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மக்களிடையே அச்ச உணர்வையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் 101 ஒன்றியங்களில் நிலக்கரி சுரங்கம் தோண்ட விடப்பட்டுள்ள டெண்டரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 ஒன்றியங்களும் அடங்கும்.
அதில் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு சேத்தியாத்தோப்பு, அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மைக்கேல்பட்டி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி ஆகிய மூன்று ஒன்றியங்கள் இதில் உள்ளது.
நிலக்கரி அமைச்சகத்தின் இந்த தன்னிச்சையான அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்றும் தமிழகத்தின் வேளாண் உற்பத்தி மண்டலமாக விளங்கும் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இங்கு இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.