சென்னை: வரும் 17ந்தேதி தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி,  எம்.எல்.ஏக்களின் தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை  செயல்படுத்த 10 குழுக்கள் அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதாவது ஆகஸ்டு மாதம் 23ந்தேதி அன்று, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்புமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், சட்டமன்ற உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நமது பங்களிப்பினை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அந்த வகையில், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அவர்களது பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமக்கு உள்ளது. குறிப்பாக, சில தேவைகள் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தும், நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றைச் செயல்படுத்திட இயலாத நிலை இருக்கலாம், மக்களின் இன்றியமையாத தேவையின் அடிப்படையிலான அத்தகைய திட்டங்களுக்கான பணிகளை நிறைவேற்றிடத் திட்ட அறிக்கை தயாரித்து அரசு அளவில் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெற வேண்டிய அவசியமும் இருக்கலாம்.

அத்தியாவசியத் திட்டங்கள் இதுபோன்ற அத்தியாவசியத் திட்டங்களை அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் உருவாக்கும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியப் பணிகள் குறித்து அந்தந்தத் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, இவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

10 முக்கியத் திட்டங்கள் உங்களுடைய தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று சட்டமன்ற உறுப்பினராகிய நீங்கள் கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அளிக்கலாம். பட்டியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, உங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நெடுங்காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள குடிநீர் மற்றும் நீர் ஆதாரத்தை மேம்படுத்தக் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள், வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்குரிய பணிகள், இணைப்புப் பாலங்கள் மற்றும் சாலைகள், மருத்துவ வசதிகள், பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ போன்ற புதிய கல்வி நிறுவனங்கள் அல்லது தற்போதுள்ள கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் உட்கட்டமைப்புப் பணிகள், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய வசதிகள், நீங்கள் பரிந்துரைக்கலாம் மின் மயானம், நவீன நூலகம் நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள், புதிய சுற்றுலாத் தளங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணிகள் போன்ற சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை நீங்கள் பரிந்துரைக்கலாம்.

எனவே, தங்களது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மக்களின் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத பத்து முக்கியமான கோரிக்கைகளை, தேவை மற்றும் அவசியத்தின் அடிப்படையில் நீங்கள் ஆராய்ந்து, அவற்றினை முன்னுரிமைப்படுத்தி, அந்தப் பரிந்துரைப் பட்டியலைத் தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அடுத்த 15 தினங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு உங்களை அன்புடன் இந்தக் கடிதம் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து, பெரும்பாலான எம்எல்ஏக்கள், தங்களது தொகுதிகளில் உள்ள முக்கிய பிரச்சினைகள் என்னென்ன என்பது குறித்து,  அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் எம்எல்ஏக்களால் அளித்த 10 கோரிக்கைகளை முன்னுரிமையில் நிறைவேற்ற உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பேரில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து திட்ட மதிப்பீடு தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு கூடுவதாக சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தமிழகஅரசு அவசரம் அவசரமாக குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளது.