சென்னை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி,  இன்று மாலை கிண்டி, ராஜ்பவனில் ஆளுநர் ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக அரசு இயற்றி மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து தான் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்தமனு விசாரணைக்கு வந்த போது, ஆளுநருக்கு எதிராக நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,”சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் அளுநரே தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். தமிழ்நாடு ஆளுநருக்கும், முதலமைச்சருருக்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆளுநர் முதலமைச்சருடன் அமர்ந்து இதைத் தீர்த்தால் நாங்கள் பாராட்டுவோம்.

ஆளுநர் முதலமைச்சரை அழைத்து பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறோம்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். அதன் விளைவாக தான் மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சருக்கு ஆளுநர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக, இன்று மாலை முதலமைச்சர் சக அமைச்சர்களுடன் ஆளுநர் ஆர்என்.ரவியை சந்தித்து பேசினார்.  இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.  அத்துடன்,நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய கடிதத்தை வழங்கினார்.  இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள்  நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி,  “உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஆளுநரை அவரது மாளிகையில் சந்தித்து பேசினோம். 21 மசோதாக்கள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் 20 மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். ஒரு மசோதா மட்டும் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டு அனுப்பப்பட்ட கோப்புகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அனுமதி தர கோரினோம். அத்துடன், முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக 112 கோப்புகள் முதற்கட்டமாக ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. அதில் 68 பேரின் முன் விடுதலைக்கு அனுமதி அளித்து, 2 பேரின் விடுதலையை ரத்து செய்திருக்கிறார் ஆளுநர். இன்னும் 42 முன்விடுதலை கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.

இது தவிர, மேலும் 7 கோப்புகள் நீதிமன்றத்தில் உள்ளன. மொத்தமாக 49 முன்விடுதலை கோப்புகள் நிலுவையில் உள்ளன. 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய தமிழ்நாடு சர்வீஸ் கமிஷனில் 4 உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள். அதற்கான ஒப்புதலையும் கேட்டுள்ளோம். இந்த கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் ஆளுநரிடம் மனுவாக கொடுத்துள்ளார்.

முதல்வர் எல்லோருக்கும் மரியாதை கொடுக்ககூடியவர். ஆளுநரும் முதல்வர் மீது மரியாதை வைத்திருக்கிறார். இந்த இரண்டுமே இந்த சந்திப்பில் தெளிவாகத் தெரிந்தது. இந்த சந்திப்பு சுமுகமாக இருந்தது. விடை எப்படி வருகிறது என்பதை நீதிமன்றத்தில்தான் பார்க்க வேண்டும். சந்திப்பு சுமுகமாக அமைந்தது” என்றார்.