சென்னை:  நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 451 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 451 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர நபர்களுக்கும், நகராட்சி நிர்வாக சென்னை மாநகராட்சியில் 227 இயக்குநரகத்தில் நபர்களுக்கும், 84 பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் 10 நபர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் 130 நபர்களுக்கும் என மொத்தம் 451 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன அணைகளை வழங்கினார்.

மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துதல், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், நகர்ப்புர வசிப்பிடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட பாதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம், சாலை மேம்பாட்டுப் பணிகள், நகர்ப்புர ஏழைகளுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெறவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு காலிப் பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பணிக்காலத்தின் போது உயிரிழந்த அரசுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி:

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 227 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு சாலைப் பணியாளர்கள் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளையும்;

நகராட்சி நிர்வாக இயக்குநரகம்:

நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 84 பணியாளர்களின் வாரிசுதாரர்களில், 21 நபர்களுக்கு இளநிலை உதவியாளர், 22 நபர்களுக்கு வருவாய் உதவியாளர், 4 நபர்களுக்கு பணி ஆய்வாளர், 22 நபர்களுக்கு தொழில்நுட்ப உதவியாளர், 15 நபர்களுக்கு அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும்;

பேரூராட்சிகள் இயக்குநரகம்:

பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களில், 3 நபர்களுக்கு பில் கலெக்டர், 4 நபர்களுக்கு இளநிலை உதவியாளர், 3 நபர்களுக்கு அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும்;

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்:

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 130 பணியாளர்களின் வாரிசுதாரர்களில், 13 நபர்களுக்கு இளைய வரைவு அலுவலர், 32 நபர்களுக்கு இளநிலை உதவியாளர், 9 நபர்களுக்கு ஓட்டுநர், 41 நபர்களுக்கு பதிவுரு எழுத்தர், 35 நபர்களுக்கு காவலாளி ஆகிய பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும்;

என மொத்தம் 451 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.ஆர்.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. வி. தட்சிணா மூர்த்தி, இ.ஆ.ப., பேரூராட்சிகளின் இயக்குநர் திரு. கிரண் குராலா, இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.