சென்னை: டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர் தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 4,517 பாசன ஏரிகள் நிரம்பி உள்ளன. பல பகுதிகளில், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகி உள்ளன. மேலும், அரசு கொள்முதலுக்காக விவசாயிகள் சேர்த்து வைத்த நெல் மூட்டைகளில் நாற்றுகள் முளைத்துள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையான பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மழை வெள்ளம் குறித்து கடந்த நான்கு நாட்களாக சென்னையில் ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்கிய முதல்வர், இன்று மாலை கடலூர் சென்று ஆய்வு செய்துவிட்டு, அடுத்த 2 நாட்கள் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்த உள்ளார்.
முன்னதாக இன்று தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை துரித்தப்படுத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைத்துமுதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இந்த குழுவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.ஆர். பரியகருப்பன், எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ், மெய்யநாதன் சக்கரபாணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.