சென்னை
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகார்த்தில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்வதாக முதல்வர் மு க ஸ்டாலின் தாக்கி பேசி உள்ளார்.
சட்டசபையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு குறித்து விவாதிக்க அதிமுக, பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் விஷ சாராய விற்பனையை தடை செய்வது குறித்து விவாதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
சட்டசபை தொடங்கியதும் விஷ சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக , பாஜக , பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டதல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். பிறகு மற்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,
”சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர். முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு, எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன். அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்”
என்று பதிவிட்டுள்ளார்.