திருநெல்வேலி

தூத்துக்குடி மற்றும் நெல்லை மக்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதி கனமழை பெய்தது. இவ்வாறு இடைவிடாமல் பெய்த மழையால் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இன்று மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது முதல்வர்,

சென்னை மக்களைப்போல தென்மாவட்ட மக்களையும் அரசு காக்கும் என உறுதி தருகிறேன். வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை விட பல மடங்கு அதிக மழை தென்மாவட்டங்களில் பெய்துள்ளது. சில இடங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1801 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போதுதான் அதிக மழை பெய்துள்ளது. 

அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் பணி செய்து வருகின்றனர். 12,653 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் உணவு, மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பு வைக்கப்பட்டன. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும். தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்”. 

என்ற அறிவித்துள்ளார்.