சென்னை: கொதிக்கும் கோடை வெயில் காரணமாக, பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு, மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும், போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது குறித்தும் , அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்றுமுதல் 2 நாள் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ்மீனா ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விடுமுறைகள் நடைமுறையில் இருப்பதால், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த முடியாத நிலையில், தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் தற்போது அக்னி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். இதற்கிடையில் மற்றொரு தரப்பினர் குளிர்வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். வெயில் காரணமாக ஏரி, குளம் குட்டைகளில் தண்ணீர் வேகமாக வற்றி வருவதால், பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் போராட்டங்களில் ஈடுபடும் சூழலும் உருவாகி உள்ளது.  கிராமங்களில் மின்தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு  தட்டுமாடமன்ற  மின்சாரம் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் வரத்தொடங்கி உள்ளன.

இந்த நிலையில்,   அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்றும், நாளையும் ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி வாயிலாக நடைபெறக் கூடிய  இந்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை 4மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறைகளின் செயலாளர்கள், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டம் 2 நாள் நடைபெற உள்ளது.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் , 19 மாவட்ட ஆட்சியர்களும், நாளை நடைபெறும் கூட்டத்தில் 19 மாவட்ட ஆட்சி தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில், தட்டுப்பாடின்றி மின் வினியோகம் , குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதன்மையாக ஆலோசனை நடைபெற உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்தும் புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் எத்தனை என்பது பற்றியும்  விவாதிப்பட உள்ளது.

மேலும்,   மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் கல்லூரி படிப்புகள்  சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மூலம் அமல்படுத்தப்பட்டு வரும் கல்லூரி கனவு திட்டம் குறித்தும்,  நான் முதல்வன்,  `மக்களுடன் முதல்வர் திட்டம்’ உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் நிலைப்பாடு குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

அத்துடன், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைபொருள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு குறித்தும் விவாதிப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த கூட்டத்தில் கலெக்டர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான குடிநீர் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்களை காத்துக் கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட உள்ளது

இன்றைய ஆலோசனை கூட்டத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடு துறை, நாகை, நாமக்கல், மதுரை, கன்னியாகுமரி, பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் கலந்து கொள்கின்றனர்.

நாளைய ஆலோசனை கூட்டத்தில்,. புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தென்காசி, திருப்பத்தூர், விழுப்புரம், வேலூர் உள்பட 19 மாவட்டங்களில் கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் கலெக்டர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான குடிநீர் மற்றும் மின்சார பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று மேற்கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.