உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.42 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு பெறப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள், தூதரக பிரதிநிதிகள் மற்றும் தொழித்துறை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட 5000 பேர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் தொழில்நிறுவனங்கள் முதலீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் உலக முதலீட்டாளர்களின் மாநாடு இன்றுடன் நிறைவு பெறுவதால் அதன் நிறைவு விழா 3 மணியளவில் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “ இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த மாநாட்டின் மூலம் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்காக 304 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டை விட 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு அதிகமாக ஈர்க்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். அடுத்த உலக மூதலீட்டாளர் மாநாடு 2021ம் ஆண்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.