சென்னை:

மிழகத்தில் கடந்த 4 நாட்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான தொடக்க பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களின் படிப்பு பாழாகி வருகிறது.

இதை தடுக்கும் பொருட்டு, பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுத்து வரும் கல்வித்துறை ரூ.7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய முன்வந்துள்ளது. மேலும், பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு சிவில் சர்விஸ் விதி 17பி-ன் கீழ் (Rule 17(b) of Tamil Nadu Civil Services (Discipline and Appeal) நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பபட்டு உள்ளது.

ஓய்வூதியம் உள்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ, ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த 22ந்தேதி முதல்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அரசு பணிகள் முடங்கி உள்ளன. மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் 25ந்தேதிக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று எச்சரித்தது. ஆனால், போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ,  ஜியோ அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில்  போராட்டம் தொடர்பாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி,  ஆசிரியர்கள்பணிக்கு திரும்பவில்லை என்றால்  தற்காலிக பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று எச்சரித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ரூ.7500 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறி உள்ளது. இதற்கான நடைமுறை உடனே தொடங்க இருப்ப தாகவும்,  வரும் ஜனவரி 28-ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

அதுபோல, வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு 17B-விதியின் கீழ் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டு இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.