சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று கோரி கையெழுத்து இயக்கத்தை துவங்கிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் நபராக அதில் கையெழுத்திட்டார்.
.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடு சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ளது. இது அவரது தாயார் சந்தியா காலத்தில் வாங்கப்பட்டதாகும். இங்குதான் இறுதிக்காலம் வரை ஜெயலலிதா வாழ்ந்தார். இப்போது இந்த வீட்டில் சசிகலா குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.
இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக கொடி பிடித்துள்ள முதல்வர் ஓ.பி.எஸ்., “இந்த வீட்டை யாருக்கு எழுதி வைத்துள்ளார் ஜெயலலிதா என்பதைக் கூட சசிகலா குடும்பத்தினர் முறையாக தெரிவிக்கவில்லை. சட்டத்துக்குப் புறம்பாக அந்த வீட்டை ஆக்கிரமித்துள்ளார்கள். அந்த வீட்டை ஜெயலலிதாவின் நினைவிடமாக்க வேண்டும்” என்று கூறிவருகிறார்.
இந்த நிலையில் இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இதுதொடர்பாக ஒரு கையெழுத்து இயக்கத்தைத் துவங்கியுள்ளார். அதில் முதல் கையெழுத்தை பதிவு செய்தார். இந்த கையெழுத்துக்களுடன் கூடிய மனுவை ஆளுநரிடம் சமர்ப்பித்து போயஸ் தோட்ட வீட்டை நினைவிடமாக்க கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் இது குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன. “ஓ.பி.எஸ். காபந்து முதல்வராக இருந்தாலும், ஜெயலலிதா வீட்டை அரசுடமையாக்குவதற்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது. தவிர, இது குறித்து அவர் வசம் இருக்கும் காவல்துறை மூலமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அதைவிட்டுவிட்டு, கையெழுத்து இயக்கம் நடத்துவது தேவைதானா” என்ற கேள்வி எழுந்துள்ளது.