சென்னை:. ‘முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கும் வரை தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆபத்தில்லை’  என்றும்,  அகில இந்திய அளவில் பெரிய எதிர்கட்சி தலைவராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவாகியு இருக்கிறார் என்றும், அவர் கலைஞரையே மிஞ்சி விடுவார் என  தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க.நகர் வடக்கு பகுதி திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நேற்று (மார்ச் 11) மாலை  நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில்  அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது; என்னுடைய ராசி, நான் எதை துவக்கினாலும் அது விளங்கும். அமைச்சர் சேகர்பாபுவை நம் பக்கம் கொண்டு வந்து சேர்த்தவன் நான். சென்னையின் அரசியல் 70 ஆண்டுகாலமாக எனக்கு தெரியும். இந்தி ஆட்சி மொழியாக ஒரு ஓட்டில் வென்று தப்பி தவறி வந்தது பீடையாக. ராஜாஜி இருக்கும் போது மும்முனை போராட்டம் நடத்தினார்கள். இப்போதும் அதே போல் இந்தி, மாநில நிதி பகிர்வு உள்ளிட்ட மும்முனை போராட்டம் நடைபெறுகிறது.

அண்ணா இறந்ததும் அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்தது. அண்ணாவை விட கலைஞர் அதிகம் எதிர்த்தார். கலைஞர் மறைவிற்கு பின் அவருடைய மகனை (ஸ்டாலின்) ‘சோட்டா பாய்’ என எண்ணினார்கள். ஆனால் அவர் வீரியமாக இருக்கிறார். அதனால் தான் யாரும் சொல்லாததை ‘நாவடக்கம் தேவை’ என மத்திய அமைச்சரை சொல்கிறார்.

கலைஞருடன் 53 ஆண்டுகள் பழகியவன் நான். கலைஞர் போல தலைவரை பார்க்க முடியாது. ஒரு தொண்டனிடம் ‘மன்னிச்சிடு பா’ என்றார். அப்பேற்பட்ட தலைவர் கலைஞர். ஸ்டாலினை குழந்தையாக பார்த்தேன். அவர் இன்று வளர்ந்து தலைவராக உள்ளார். 10 முறை டெல்லி சென்று அகில இந்திய தலைவரானார் கலைஞர். இன்று இரு முறை டெல்லி சென்று அகில இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறார் ஸ்டாலின்.

அகில இந்திய அளவில் பெரிய எதிர்கட்சி தலைவராக உருவாகியுள்ளார். எந்த தேர்தலையும் சந்திக்க கூடிய ஆற்றலும், தைரியமும் தலைவருக்கு (ஸ்டாலின்) உள்ளது. எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. ஸ்டாலின் கலைஞரையே மிஞ்சி விடுவாரோ என எண்ணுகிறேன். அடிகளை அளந்து வைக்கக்கூடிய தலைவர் அவர் இருக்கும் வரை தமிழுக்கும், நமக்கும் ஆபத்தில்லை” .

இவ்வாறு கூறினார்.