சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களில், பன்னாட்டு மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். அதன்படி, 190 வீரர்களுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில், இவ்வாண்டு கொலம்பியாவில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான உலக தடகள வாகையர் போட்டியில், டிரிப்பிள் ஜம்ப் பிரிவில் (Triple Jump) வெள்ளிப் பதக்கம் வென்ற டி. செல்வபிரபு, 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஒட்டப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பரத் ஸ்ரீதர் ஆகியோருக்கு தலா 4 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 8 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்; இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை வளைகோல்பந்து வாகையர் போட்டியில் (ASIA CUP HOCKEY CHAMPIONSHIP-2022) இந்திய அணியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் எஸ். மாரீஸ்வரன் மற்றும் எஸ். கார்த்தி ஆகியோருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்.
2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு நாட்டின் சார்ஜாவில் நடைபெற்ற உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அளவிலான விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் தடகளப் போட்டிகளில் 2 தங்கப்பதக்கங்கள் வென்ற ஆர். பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஏ. செல்வராஜ் அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற ஜி. விஜயசாரதி அவர்களுக்கு 4 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற கே. கணேசன் அவர்களுக்கு 4 இலட்சம் ரூபாய்க்கான காசோலை.
குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ். மனோஜ் அவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, இறகுப்பந்து ஒற்றையர் பிரிவு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற எஸ். சிவராஜன் அவர்களுக்கு 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலை; குஜராத்தில் 29.9.2022 முதல் 12.10.2022 வரை நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் (36th NATONAL GAMES 2022) வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 விளையாட்டு வீரர்கள் மற்றும் 112 விளையாட்டு வீராங்கனைகள், என 180 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 4 கோடியே 29 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்; என தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார் இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்றுவரை 1433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.90 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.