சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் 15ந்தேதி (திங்கட்கிழமை) மருத்துவநிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அப்போது கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்று பரவல் சமூக தொற்றாக பரவி இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு 5வது கட்ட ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளதால், தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 22,047 பேர் குணமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கையும் 367-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 28,924 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மேலும் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின. மருத்துவ நிபுணர்களும், ஊரடங்கை கடுமையாக்கினால் மட்டுமே நோய்த் தொற்றை குணமாக்க முடியும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக முதல்வரும், சுகாதாரத் துறை செயலாளரும் அதை மறுத்து உள்ளனர். இந்த நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமை செயலகத்தில் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.