சேலம்:
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டையின் போது காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த என்கவுண்டரில் சேலத்தை சேர்ந்த மதியழகன் என்பவர் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். உயிரிழந்த மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராணுவ செய்தித்தொடர்பாளர், பணியில் வீர மரணம் அடைந்த மதியழகனின் உயிர்தியாகத்தை நாடு மறக்காது என்று குறிப்பிட்டுள்ளார். மதியழகனின் மறைவுச் செய்திக் கேட்டு அவரது குடும்பம் மட்டுமின்றி, அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின் பாதுகாப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, வீர மரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீர மரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களின் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். வீரமரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.