மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ். துவக்கி வைப்பார்கள் என  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில்நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, பாரம்பரியம் மிக்கதும், புகழ்பெற்றதுமான அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் போட்டி நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 14ம் தேதி அவனியாபுரம், 15ம் தேதி பாலமேடு மற்றும் 16ம் தேதி அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் வாடிவாசல் பகுதிகளை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவலர் கூறியதாவது,

ஜல்லிக்கட்டு கொரோனா காலத்தில் நடைபெறுவதால் சமூக இடைவெளி விட்டு பார்வையாளர் அமர வைக்க வேண்டும், மாடுபிடி வீரர்களுக்கு கிருமி நாசினி தெளிக்க வேண்டும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

வருகிற 9–ம் தேதி மாடுபிடி வீரர்கள் பதிவும் 11–ம் தேதி காளைகள் பதிவு நடைபெறும்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மணிக்கு 75 நபர் வீதம் மொத்தம் 8 சுற்றாக 300 வீரர்களுக்கு மிகாமல் அனுமதி அளிக்கப்படும். அவர்கள் சுழற்சி முறையில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை களம் இறங்கவும் உள்ளனர்.

ஜல்லிக்கட்டு திடலில் தேங்காய் நார்களை பரப்புவது, போட்டியை பார்க்க வருபவர்களின் வாகனங்களை நிறுத்தும் இடம், கேலரி அமைப்பது, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதி அமைக்கப்படும்.

வெளி மாவட்ட அனைத்து காளைகளுக்கும் அனுமதி வழங்கப்படும். அனைவருக்கும் வாய்ப்புகள் தரப்படும். ஒரு வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட காளைகளை இன்னொரு ஜல்லிக்கட்டில் அவிழ்க்க அனுமதி இல்லை. இது விழா குழுவின் முடிவு

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.