சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக  நடைபெறுகிறது.

நாடு முழுவதும் இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல்வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.  கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி அரசியல் கட்சிகள் சென்றுகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றிட தீவிரமாக பணியாற்றி வரும் திமுக, ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கிய நிலையில், திமுகவினரையும் களத்தில் இறக்கி பணியாற்றி வருகிறது. அதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டமானது நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள்,அமைச்சர்கள், தொகுதி மேற்பார்வையாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தேர்தலில் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான கருத்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே கேட்டு தெரிந்து கொள்ள உள்ளதாக கூறப்படுவதால் இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.