பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கல்குவாரி ஏலத்தில் பயங்கர மோதல் ஏற்பட்டது. அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர் கள், ஏலம் கேட்க வந்த மற்ற திமுகவினர் மற்றும் மாற்று கட்சியினர் மற்றும்  பா.ஜ.க.வினர்மீது தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, அமைச்சரின் உதவியாளர் உள்பட 10 தி.மு.க.வினர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர், நாராயண மங்கலம், நாட்டார் மங்கலம், பாடாலூர், கல்பாடி வடக்கு, செங்குணம் உள்ளிட்ட 31 கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலம்  நேற்று (அக்டோபர் 30ந்)  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு  இருந்தது.

இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பலர் ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பம் செய்யும் வகையில் கடைசி நாளான நேற்று, விண்ணப்பங்களை சமர்பிக்க நேற்று கடைசிநாள் என்பதால் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்க பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்தனர். இதில் திமுக, பாஜக உள்படபல கட்சிகளை சேர்ந்தவர்களும் வந்திருந்தனர்.

ஆனால், மற்றவர்களை விண்ணப்பிக்க விடாமல் அமைச்சர் சிவசங்கரின் ஆட்கள் மிரட்டல் விடுத்து வந்தனர்.  திமுகவினரை தவிர வேறு யாரும் ஏலம் கேட்பதற்கான விண்ணப்பத்தை பெட்டியில் போடக்கூடாது என தடுத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் வாக்குவாதம் முற்றியதால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் டெண்டர் மனு போட வந்தவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து கோஷம் போட்டனர். கோஷம் முற்றிய நிலையில் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். திடீரென டெண்டர் மனுக்கள் பெற வைக்கப்பட்டிருந்த பெட்டியை அடித்து நொறுக்கினர்.

இதனால் அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அதற்குள் அங்கிருந்த அனைவரும் கலைந்து சென்று விட்டனர். பெட்டி இருந்த அறையை அதிகாரிகள் அதிரடியாக மூடினா்.

அப்போது, மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீர்கூட்டம் ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடந்த நிலையில், திமுகவினரின் அடாவடியை கண்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து ஏலம் எடுக்க விடாமல் தகராறில் ஈடுபட்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், திமுவை சேர்ந்த ரமேஷ், கோவிந்த், செல்வம், விஜயகாந்த், தர்மா உள்ளிட்ட 10 பேர் மீது 8 வழக்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மோதலை தொடர்ந்து இன்று நடைபெற இருந்த கல்குவாரி ஏலத்தை தேதி மாவட்ட ஆட்சியர் குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார். இது குறித்து கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள அறிக்கையில், நிர்வாக காரணங்களால் பெரம்பலூர் மாவட்ட கனிமவள குவாரிகள் ஏலம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.