நாகை: நாகப்பட்டிணம் அருகே கடலில், இரு மீனவர்கள் கிராமங்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை அருகே உள்ள அக்கரைப்பேட்டை திடீர்குப்பம் – கீச்சாங்குப்பம் மீனவர்களிடையே நடுக்கடலில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. பைபர் படகின் மீன்பிடி வலை சேதமானதில் ஏற்பட்ட தகராறில் திடீர்குப்பத்தை சேர்ந்த சிவனேசெல்வம் என்பவர் உயிரிழந்ததாகவும், திடீர்குப்பத்தை சேர்ந்த காலச்சிநாதன் என்பவர் கடலில் மூழ்கிய நிலையில் உயிரிழந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொரு மீனவர் ஆத்மநாபன் நாகை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நடுக்கடலில் அக்கரைப்பேட்டை-கீச்சாங்குப்பம் மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சண்டை முற்றிய நிலையில், அதில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்தனர். வழக்கம்போல அக்கரைப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ்க்கு சொந்தமான பைபர் படகில் சகோதரர்கள் ஆத்மநாபன், சிவனேசெல்வம், காலஸ்திநாதன் ஆகியோர் 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதேப்பகுதியில் கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த கோகிலா செல்விக்கு சொந்தமான விசைப்படையில் 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அங்கே மீன்பிடித்து கொண்டிருந்த போது, பைபர் படகின் மீன்பிடி வலை சேதமடைந்துள்ளது. இதனால் இரண்டு குழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் மோதல் அதிகரிக்க, தகராறில் அக்கரைப்பேட்டை சேர்ந்த சிவனேசெல்வம், காலஸ்திநாதன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காலஸ்திநாதனின் உடல் கடலில் காணாமல் போனது. மேலும் இடது கையில் முறிவு ஏற்பட்டு ஆத்மநாபன் என்பவர் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் பைபர் படகு சேதமடைந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் கிராம பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.