சிவகங்கை:  சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட ஒப்பந்த பணி எடுப்பதில் திமுகவைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலருக்கு காயம் ஏற்பட்டு மண்டை உடைந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை தொண்டி சாலையில் குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு மற்றும் நிர்வாகப் பொறியாளர் அலுவலகங்கள் ஒரே கட்டடத்தில் அமைந்துள்ளன. நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் 27 குடிநீர் பராமரிப்புப் பணிகள், கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் ஆறு குடிநீர் பராமரிப்புப் பணிகள் என 33 பணிகள் 3.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டன.
தில், திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன் மற்றும் ஏராளமான திமுக ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். அப்போது, திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன் அணியினருக்கும், சிவகங்கை ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சோமன் தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் எடுப்பது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பை சேர்ந்த திமுகவினர், நாற்காலிகளை கொண்டு தாக்கி கொண்டதில், திமுக நிர்வாகி சோமன் என்பவருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், எதிர் தரப்பினரின் காரை கற்களால் தாக்கி சேதப்படுத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி, மோதலில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சோமன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், பல இடங்களில், அரசு ஒப்பந்தங்களை எடுப்பதில் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஒரே கட்சியைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே  மோதல் ஏற்பட்டு மண்டை உடைந்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.