சென்னை: சென்னையில் மாணவர்களுக்கு இடையேயான மோதல் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த நிலையில், மீண்டும் தலைதூக்கி உள்ளது.  இருவேறு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலில்  ஒரு மாணவருக்கு வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 10 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

 

சென்னை அடுத்த திருவள்ளூர் அருகே பச்சைப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மற்றொரு  கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, திருவாலங்காடு, மணவூர், மோசூர், கடம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய பகுதியிலிருந்து சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரிக்கு மாணவர்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்து படித்து வருகின்றனர். இந்த மாணவர்களிடையே ரூட் தல விவகாரத்தில் ரயிலில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சம்பவமும் நடைபெற்றது

இரு தரப்பினரும் அரிவாள், கத்தி என ஆயுதங்களை கொண்டு மோதிய நிலையில், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவனுக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த மோதலைக்கண்ட பொது மக்கள் அலறியடித்து ஒடினர். படுகாயம் அடைந்த மாணவனை மீட்ட ரயில்வே காவல்துறையினர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் துணைக் கண்காணிப்பாளர் சந்திரதாசன் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். அதில் தக்கோலம் பகுதியைச் சேர்ந்த மாணவர் என்பது தெரியவந்தது. இசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடம்பத்தூர் காவல் நிலைய காவல் துறையினர் 10 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் மோதலின்போது, ஒரு மாணவனை வேறு கல்லூரி மாணவர்கள் அடித்து துன்புறுத்தியதால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடைபெற்றது. இதனால் ரயில்வே காவல் துறையினர் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கி வந்தனர். இந்த நிலையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை  ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற மோதலில் ஈடுபடும் மாணவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.