ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது இன்று காலை போர் பிரகடனம் செய்த சில நிமிடங்களில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது.
ஏவுகணைகள் மூலம் தாக்குதலை தொடங்கி இருக்கும் ரஷ்ய படைகள் உக்ரைன் ராணுவ வீரர்களை நிலைகுலையச் செய்து எதிரி நாட்டி மண்ணில் முன்னேறி வருகிறது.
உக்ரைன் ராணுவ நிலைகளையும் விமானப் படை தளங்களையும் குறிவைத்து தாக்கி வரும் ரஷ்ய படையினரின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவின் தென் பிராந்தியத்தில் உள்ள 12 சர்வதேச விமான நிலையங்களில் பயணிகள் விமானப் போக்குவரத்து மார்ச் 2 ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தவிர, உக்ரைன் தனது நாட்டு வான்வழியை முற்றிலும் தடை செய்துள்ளது இதனால் உக்ரைனில் இருந்து எந்த ஒரு விமானமும் வந்து செல்ல முடியாமல் உள்ளது.
உக்ரைன் மீதான இந்த போரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று ரஷ்யா கூறியுள்ள போதிலும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உக்ரைன் நாட்டில் தங்கி உள்ள நிலையில் அவர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது.
அதேவேளையில், ரஷ்ய தொலைக்காட்சி மூலமாக உக்ரைன் மீதான போர் பிரகடனம் செய்த அதிபர் புடினின் பேச்சு அடங்கிய வீடியோ 21 ம் தேதியே எடுக்கப்பட்டுள்ளதாகவும் போர் குறித்து ரஷ்யா ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது போர் பிரகடனம் செய்தார் ரஷ்ய அதிபர் புடின்… அமெரிக்காவின் தலையீட்டிற்கு சவால்…