டெல்லி: நாடு முழுவதும் நடப்பாண்டு 10, 12-ஆம் வகுப்புகளின் நேரடி பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக,  இந்த ஆண்டு, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதியாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு காரணமாக, கடந்தஆண்டு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, முந்தை தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்தும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, ஆண்டு இறுதித்தேர்வுகள் நேரடித்தேர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுத்தேர்வு நடத்த தடை விதிக்க கோரி குழந்தை நல ஆர்வலர் அனுபா ஸ்ரீவஸ்தவா சகாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பல பள்ளிகளில் வகுப்புகள் முறையாக நடைபெறவில்லை. சில மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்றன, அப்படி இருக்கும்போது நேரடி தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கூறினார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த, அது எங்களுக்கும் தெரியும் என்றதுடன்,  தேர்வுகள் நடத்துவது தொடர்பாக உரிய அமைப்புகள் முடிவு எடுக்கட்டும்.  தேர்வு தேதிகள், விதிமுறைகள் அறிவிக்கப்படும் முன்னரே இதுபோன்ற பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது சரியல்ல என்று கூறியதுடன்,  தேர்வுகள் உரிய விதிமுறைகளின்படி நடைபெறாவிட்டால் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யலாம். ஆனால், இதுபோன்ற பொதுநல மனு மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த மனுமீது எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க போவதில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்ததுடன்,  இது போன்ற பொதுநல மனுவை எதிர்காலத்தில் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன் மூலம் நேரடி பொதுத்தேர்வு நடத்த தடை இல்லை என்பது உறுதியாகி உள்ளது.