அகதிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டத்துக்கு 7 மாநில பா.ஜ.க. தலைவர்களும் எதிர்ப்பு
அமீத்ஷாவுக்கு எதிராக போர்க்கொடி …
இந்திய வரைபடத்தின் வலது கை பக்கமாக இருக்கும் அசாம்,அருணாச்சல பிரதேசம், மிசோரம், மேகாலயா, நாகலாந்து,மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய பிராந்தியங்கள் வட கிழக்கு மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டைகளாக இருந்தன.இன்று மருந்துக்கும் கூட ஒரு மாநிலத்திலும் கதர் ஆடை கட்சி ஆட்சியில் இல்லை. சிறு-குறு கட்சிகளுடன் கடந்த சட்டப் பேரவை தேர்தல்களில் இணக்கம் வைத்து பா.ஜ.க.போட்டியிட்டது.
இந்த நிமிடம் வரை 7 மாநிலங்களிலும் பா.ஜ.க.கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது.அடுத்த நிமிடத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை.
காரணம் – மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடி உரிமை சட்ட திருத்த மசோதா.
மத துவேஷம் காரணமாக அண்டை நாடுகளான பாகிஸ்தான்,பங்களா தேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த பல லட்சம் பேர் இந்த மாநிலங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் முஸ்லிம் அல்லாத அனைவருக்கும் இந்திய குடிஉரிமை வழங்க இந்த சட்ட திருத்தம் வழி வகுக்கிறது.மக்களவையில் மசோதா நிறைவேறி விட்டது. மாநிலங்களில் அடுத்த வாரம் நிறைவேற்றப் படுவதற்கு காத்திருக்கும் இந்த மசோதாவுக்கு 7 வட கிழக்கு மாநில மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி கொண்டிருக்க- அங்குள்ள கட்சிகளும் அவர்களுக்கு துணையாக உள்ளன.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் சில தினங்களுக்கு முன்னர் கூடிய இந்த பிராந்தியகட்சிகளின் தலைவர்கள் ‘மசோதாவை நிறைவேற்றினால் நடப்பதே வேறு ‘ என்ற ரீதியில் மத்திய அரசை எச்சரித்துள்ளனர்.
இவர்களில் 7 கட்சி தலைவர்கள் பா.ஜ.க.கூட்டணியில் அங்கம் வகிப்போர் என்பதால் டெல்லி அதிர்ந்துள்ளது.மக்களவை தேர்தலில் –இந்த விவகாரம் 7 மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பா.ஜ.க.தலைமை கவலை அடைந்துள்ளது.
இந்த மசோதா குறித்து 7 மாநில பா.ஜ.க.தலைவர்கள் நேற்று வரை வாய் திறக்க வில்லை. இப்போதும் அவர்களும் மசோதவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
‘’இந்த மசோதாவை கை விட வேண்டும்’’ என அவர்கள் பா.ஜ.க.மேலிடத்துக்கு தாக்கீது அனுப்பி உள்ளனர்.
‘’இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் ஒரு தனி மனிதர் காட்டும் பிடிவாதம் வட கிழக்கு பகுதியில் பா.ஜ.க.வை அழித்து விடும்’’ என்று அவர்கள் முனகு கிறார்கள்.
தனி மனிதர் என்று அவர்கள் குறிப்பிடுவது அமீத்ஷாவை.
இந்த மசோதா இந்துக்களின் வாக்குகளை அறுவடைசெய்ய உதவும் என்று அமீத்ஷா திடமக நம்ப- மோடியோ மவுனம் காக்கிறார்.
இந்த மசோதாவால் வடகிழக்கு மாநிலங்கள் போராட்டக்களமாக மாறிக்கொண்டிருக்க இந்த மாதம் 2-வது வாரத்தில் மோடியும், அமீத்ஷாவும் அங்கே தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல உள்ளனர்.
இந்த பயணத்தின் போது 12 ஆம் தேதி அமீத்ஷா-அசாம் மாநிலத்தில் சில முக்கிய தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.அவர்களுடன் இந்த விவகாரம் குறித்து அவர் விவாதிப்பார் என்று தெரிகிறது.
-பாப்பாங்குளம் பாரதி