மாயாவதி, மம்தா, லாலு, நாயுடு…. நான்கு பேருக்கு குடைச்சல்….மோடியின் ஆட்டம்  ஆரம்பம்….

க்களவை  தேர்தலில் பிரதமர் மோடிக்கு தீராத தலைவலியாக இருக்கப்போகிறவர்கள் என்ற ‘லிஸ்ட்’டில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட  ‘மக்கள் தலைவர்கள்’ பெயர் இடம் பிடித்துள்ளது.

‘அடக்க முடியாதவர்கள்..அடங்கி போவாதவர்கள்’ என்ற தலைப்பிட்ட  கோப்பில் உள்ள சிலரில்  நான்கு பேரை முதல் கட்டமாக ‘செலக்ட்’ செய்து –தங்கள் குடைச்சலை  ஆரம்பித்திருக்கிறது மோடி  அரசு.

சி.பி.ஐ.,அமலாக்கத்துறை ,வருமான வரி இலாகா ஆகிய ‘ மூன்று தெய்வ’ங்களும் தான் –பா.ஜ.க.அரசின் இப்போதைய ரட்சகர்கள்.

மும்மூர்த்திகளும் சேர்ந்து அந்த நால்வர் மீது-துறை ரீதியிலான நடவடிக்கையை தொடங்கி விட்டனர்.

யார் அந்த நால்வர்?

லாலு பிரசாத் யாதவ், மாயாவதி, மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு.

எந்த மாதிரியான நடவடிக்கை?

ஒவ்வொருவர் மீதும் வீசப்பட்டுள்ள பாசக்கயிறுகளையும்,அதன் நிஜமான பின்னணியையும் விரிவாகவே அலசலாம்.

முதல் பிரஜை-லாலு.பீகார் முன்னாள் முதல்வர்.மாட்டுத்தீவன  வழக்கில் தண்டனை பெற்று சிறை வாசம் அனுபவிக்கிறார்.

எனினும் ஜெயிலில் இருந்த படியே ‘ரிமோட்’ கண்ட்ரோலில்’ பீகார் அரசியலை ஆட்டி வைத்துக்கொண்டிருக்கிறார்,லாலு.

பீகாரில் ஆட்சி நடத்தும் நிதீஷ்குமாரின்  ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க.வும்,ராம்விலாஸ் பஸ்வானை ஜூனியர் பார்ட்னராக சேர்த்துக்கொண்டு  கூட்டணி அமைத்திருக்க-

காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் சில உதிரி கட்சிகளை இணைத்து லாலுவின்  ஆர்.ஜே.டி.கட்சி ‘மெகா’ கூட்டணியை உருவாக்கி உள்ளது.

பா.ஜ.க. கூட்டணிக்கு-லாலு கூட்டணி பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால்- ஆட்டத்தை  அங்கிருந்து  ஆரம்பித்தார் மோடி.

லாலுவின் குடும்பத்தார் பினாமி பெயரில் ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக வருமான வரித்துறையில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்,லாலு மனைவி ராப்ரி ,மகள் ஹேமா ஆகியோருக்கு சொந்தமான 3 ‘பிளாட்’களை மூன்று தினங்களுக்கு முன்பு வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.அவர்களிடம் வேலை பார்த்த  2 பேர் ,இந்த சொத்துக்களை ராப்ரிக்கும்,ஹேமாவுக்கும் பரிசாக வழங்கியதாக  ‘கேஸ்’ டயரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாலுவை தொடர்ந்து மோடி வச்ச அடுத்த குறி மாயாவதி.

உ.பி.மாநிலத்தில் கடந்த மக்களவை தேர்தலில் –அங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களை பா.ஜ.க.கூட்டணி அள்ளியது.மீண்டும் அதே போன்ற வெற்றியை அறுவடை செய்யலாம் என்ற பா.ஜ.க.வின்  ஆசையில் –மண்ணை அல்ல- மலையே போட்டு சிதைத்துவிட்டார் மாயா.

தனது ஆயுட்கால எதிரியான அகிலேஷ் யாதவுடன் தொகுதி பங்கீடு செய்து கொண்டு தேர்தல் ‘’டூர்’’ கிளம்பி விட்டார்.இவர்கள் உடன்பாட்டினால்- இந்த முறை உ.பி.யில் பா.ஜ.க. 46 தொகுதிகளை இழக்க நேரிடும் என்று அத்தனை கருத்து கணிப்புகளும் அடித்து சொல்ல- ‘ரெய்டு’அடிப்பதை தவிர வேறு உபாயங்களை கையாள முடியாமல் போனார் மோடி.

உ.பி.யில் 2007 ஆம் ஆண்டில் முதல்வராக பதவி ஏற்ற மாயாவதி ,தனது குரு கன்ஷிராம்,மற்றும் கட்சி சின்னமான யானை சிலைகளை மாநிலம் முழுவதும் நிறுவினார்.இந்த நினைவிடங்கள்  அமைப்பதில் 111 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடத்தப்பட்டு-அரசுக்கு நாமம் போட்டதாக  5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கை இப்போது விசாரித்து வரும் அமலாக்கத்துறை ,சில மூத்த அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி மாயாவதியை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.ராப்ரி தேவி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட அதே வியாழக்கிழமை அன்று – இந்த சோதனை   நடந்துள்ளது.

மோடியின் அடுத்த இலக்காக அமைந்தவர்-மம்தா.மே.வங்க முதல்வர்.அண்மையில்  22 கட்சி தலைவர்களை கொல்கத்தாவுக்கு   அழைத்து –மோடிக்கு எதிராக ஒரே மேடையில் அமர வைத்து –திட்டி தீர்த்தவர்.

விடுவாரா மோடி?

கொல்கத்தாவில் உள்ள பொன்ஸி என்ற நிறுவனம் மம்தாவின் ஓவியங்களை விலைக்கு  வாங்கியதாக கூறப்படும் நிலையில்-அதன் மீது சில புகார்கள் உள்ளன.இதை விசாரித்து வரும் சி.பி.ஐ.மம்தாவின் வலது கரமாக கருதப்படும் மஜும்தார் என்பவர் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர்.

மேலும் மம்தா கட்சி எம்.பி. தெரக் ஓ.பிரெயனுக்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது சி.பி.ஐ.

அமலாக்கத்துறையால் நெருக்குதலுக்கு ஆளாகி இருக்கும் அடுத்த நபர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

மற்றவர்களை விட இவர் மீது மோடிக்கு அதிகமாகவே ஆத்திரம் உண்டு.

பா.ஜ.கவை வீழ்த்த  ஆரம்ப கட்ட முயற்சிகளை எடுத்தவர் இவர்தான்.

ஆந்திராவில் -2012 ஆம் ஆண்டில் எம்.எல்.சி. தேர்தல் நடந்த போது தெலுங்கு தேசம் வேட்பாளருக்கு ஓட்டுப்போட சொல்லி- ஆங்கிலோ –இந்தியன் எம்.எ.ஏ.ஸ்டீபன்சன் என்பவருக்கு தெலுங்கு தேசம் கட்சி  லஞ்சம் கொடுக்க முயன்றாக ஒரு வழக்கு உள்ளது.இது தொடர்பாக ஸ்டீபன்சுடன் சந்திரபாபு நாயுடு பேசியதாக  தெரிகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு  ஆஜர்  ஆகுமாறு –தெலுங்கானா  காங்கிரஸ் செயல் தலைவர் ரேவந்த் ரெட்டிக்கு அமலாக்கத்துறை நேற்று(வெள்ளிக்கிழமை) நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதில் சந்திரபாபு நாயுடுவுக்கு என்ன நெருக்குதல் என்கிறீர்களா?

இன்றைக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ள ரேவந்த்- இந்த புகார் வெடித்த நேரத்தில் – தெலுங்கனா மாநில தெலுங்கு தேசம் தலைவராக இருந்தவர்.

-பாப்பாங்குளம் பாரதி