மதுரை: குலசை தசரா விழா தொடங்க உள்ள நிலையில், தசரா ஆட்டத்தின்போது, பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் இடைக்கால தடை விதித்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா  தென்மாவட்ட மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியாவில் நடைபெறும் தசரா திருவிழாக்களில்,  மைசூருக்கு அடுத்தப்படியாக குலசை தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது.  ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் இத்திருவிழாவில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

நடப்பாண்டு, தசரா திருவிழா செப்டம்பர் 26ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் மாதம் 5ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் உடன் முடிவடைகிறது.

இந்த விழாவின்போது, பல ஆயிரம் பேர் நேர்த்தி கடனாக அம்மன் உள்பட பல்வேறு வேடங்கள் அணிந்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்துவர். மேலும் கிராமங் களில் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் நபர்கள், குழுவாக சேர்ந்து விழாவை சிறப்பிப்பதுடன், ஊராக சென்று ஆடல்பாடல் ஆட்டத்துடன் சென்று காணிக்கை வசூலித்து கோவிலுக்கு செலுத்துவார்கள்.

கடந்த காலங்களில் இவ்வாறு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் கரகாட்டம், கும்பாட்டம் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் மட்டுமே நடைபெறும். ஆனால், தற்போது இந்த கலைகளைக் சேர்ந்த கலைஞர்கள் போதுமான அளவு இல்லாத காரணத்தால், சினிமா துணை நடிகைகளைக் கொண்டு, சினிமா பாடல்களுக்கு கவர்ச்சி கரமாக ஆடும் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த நீதிமன்றம், குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவில் பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருவிழாவிற்கு நேரில் சென்று பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் விதிக்கப்பட்ட தடை கடைபிடிக்கப்படுகிறதா என கண்கானிக்க வேண்டும். மேலும்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பதை மாவட்ட கலெக்டர் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.