மழை இரவில் ஒரு கொலை நடக்கிறது, அந்தக் கொலையை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்கிற பரபர ஓட்டமே கதை.

ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத மூவர். ஒரு பிளாக்மெயில் கும்பலால் மிரட்டப்படுகிறார்கள். மூவரும் அந்த பிளாக்மெயில் கும்பலின் தலைவனை பதிலுக்குப் பழிவாங்க அவன் வீட்டுக்கு வெவ்வேறு நேரத்தில் சென்று திரும்புகிறார்கள். அந்த வீட்டில் ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடக்கிறார்.

அவர் தற்கொலை செய்துகொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா, கொலை என்றால், கொலையாளி யார், காரணம் என்பதற்கெல்லாம் அதிரடி திருப்பங்களோடு காரணம் சொல்கிறது, “இரவுக்கு ஆயிரம் கண்கள்”  படம்.

கதையின் நாயகனாக அருள்நிதி. கால் டாக்சி உரிமையாளர் மற்றும் ஓட்டுநராக வருகிறார். வழக்கம்போலவே இயல்பான நடிப்பு. இல்லையில்லை.. வழக்கத்தைவிட இன்னும் சிறப்பாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆத்திரம்,, குழப்பம், விரக்தி என உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மஹிமா நம்பியார், அஜ்மல், சுஜா வரூணி, வித்யா பிரதீப், சாயா சிங், ஆனந்தராஜ், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், ஆடுகளம் முருகதாஸ், அச்யுதா குமார்… எனப் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.

எத்தனையோ பிரச்னைகள் ஏற்பட்டாலும் புன்னகை மாறாத  மஹிமா நம்பியார் கவர்கிறார். கொலை செய்யச் சென்ற இடத்தில் காமெடி செய்து ரசிக்கவைக்கிறார் ஆனந்தராஜ். அசத்தல் வில்லனாக மிரட்டுகிறார் அஜ்மல். மற்றவர்களும் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.

த்ரில்லர் படத்துக்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அரவிந்த் சிங். சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. படத்தொகுப்பாளர் சான் லோகேஷின் நறுக் சுறுக் எடிட்டிங் கவர்கிறது.

கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மற்ற கதாபாத்திரங்களோடு ஏதோவொரு தொடர்பு இருப்பதாக, ஏதோவொரு சூழலில் சந்தித்துக்கொள்வதாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அனைத்துமே தற்செயல்களான சந்திப்பு என்பது கொஞ்சம் உறுத்துகிறது.

ஆனாலும் படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை சீட் நுனியில் உட்கார வைத்துவிடுகிறார் இயக்குநர் மு.மாறன். சில விநாடிகள் கவனிக்காவிட்டாலும் ஏதோ ஒரு ட்விஸ்டை மிஸ் செய்ய வேண்டியிருக்கும். அப்படியோர் திரைக்கதை அமைப்பு.

சமூக வலைதளங்களால் ஏற்படும் சில பிரச்சினைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

ஆசையே அழிவுக்குக் காரணம்  என்பதை மைய இழையாக வைத்திருக்கும் இயக்குநர், படத்தில் அவ்வப்போது புத்தர் சிலைகளோடு தொடர்புபடுத்திக் குறியீடாய்க் காட்டியிருப்பது சிறப்பு.

மொத்தத்தில் ரசிக்க வைக்கிறது படம்.