சென்னை:

டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் திரையுலகினர் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திரையுலகம் சம்பந்தமாக தனி வாரியம் அமைக்கப்படும் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு சமீபத்தில் அறிவித்திருந்தார்8.

இந்நிலையில்,  தமிழக அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த  தமிழக திரையுலகினர், திரையுலககில் நிலவி வரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர்.

அதையடுத்து,  தமிழக அரசு விரைவில் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக கூறியதாக  நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

கியூப் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச் 1ந் தேதி முதல் புதிய படங்கள் எதையும் வெளியிடாமல் நிறுத்தி வைத்தது. மார்ச் 16ந் தேதி முதல் படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது. கியூப் நிறுவனங்கள், தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்கள் நடத்திய பலசுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.

கடந்த மார்ச் மாதம் 20ந்தேதி இதுகுறித்து,  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்துள்ளனர். 8% கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை திரையரங்கத்தை புதுப்பிக்கும் முறையை 3 ஆண்டுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.

ஆனாலும், அரசு எந்தவித முடிவும் தெரிவிக்காத நிலையில், தியேட்டர்களில்  புதுப்படங்கள் வெளியாகாமல்,  படப்பிடிப்பு மற்றும் அனைத்து சினிமா தொடர்பான வேலைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டமும், லட்சக்கணக்கான பேர் வேலையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில், சினிமா துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். அதையடுத்து, கடம்பூர் ராஜூவை, விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர். திரையுலகத்தில் நிலவி வரும் பிரச்னை குறித்து விரிவாக பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு 2 நாளில் ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.