மிழகத்தில் வரும் ஜூன் 29ஆம் தேதியோடு தி.மு.கவைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், எஸ். தங்கவேலு, காங்கிரசைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், அ.தி.மு.கவைச் சேர்ந்த ஏ.நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் ஆகியோரின் பதவிக் காலம் முடிவடைகிறது.
இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ஜூன் 11ஆம் தேதி நடக்கும் என்று  அறிவிக்கப்பட்டது.
காலியான இடங்களில்  4 இடங்களுக்கு அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்ரமணியன், வைத்திலிங்கம், விஜயகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் அக் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வர்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் அக் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வர்

தி.மு.க. சார்பில், எஸ்.ஆர். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
மேலும் 7 சுயேச்சைகளும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்கள் இல்லாத காரணத்தால் சுயேச்சைகள் ஏழு பேரின் வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.  ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதாக தமிழக சட்டப்பேரவையின் செயலர் ஜமாலுதீன் அறிவித்திருக்கிறார்.