திருவனந்தபுரம்: சித்திரை மாத பிறப்பு மற்றும் விஷு பண்டிகையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் நடை திறந்து, சுவாமிக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் அதிக நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். அப்போது பல லட்சம் பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு, அய்யப்பனை தரிசித்து ஆசி பெற்று செல்வர். அதுபோல, தமிழ் மாதங்களின் தொடக்கத்தின்போதும், ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை முதல் 5 நாட்கள் கோவில் திறந்திருக்கும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
அதன்படி சித்திரை மாத பிறப்பு மற்றும், கேரளர்களின் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (10-ந்தேதி) மாலை திறக்கப்படுகிறது. வரும் 18ந்தேதி வரை 8 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். நாளை (ஏப்ரல் 10ந்தேதி) மாலை 5 மணிக்கு அய்யப்பன் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார். சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவில் நடை வருகிற 18-ந்தேதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 14-ந்தேதி விஷூ பண்டிகை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது.
அய்யப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் உடனடி முன்பதிவு செய்தும் சாமி தரிசனம் செய்யலாம். இதற்காக பம்பையில் உடனடி முன்பதிவு மையம் அமைக்கப்படுகின்றன.
சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பத்தினம்திட்டா, கோட்டயம், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.