சாலையே போடாமல் கணக்கு காட்டி, பணத்தை சுருட்டும் வில்லங்கமான ஆட்கள் இந்தியாவில் உண்டு. ஆனால், போட்ட சாலையை திருடி விற்ற பலே ஆசாமி சீனாவில் சிக்கியிருக்கிறார்.

ஆமாம்… சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ளது சங்கேஷூ கிராமத்தில்தான் இந்த பலே திருட்டு நடந்திருக்கிறது. கடந்த மாதம் 24-ம் தேதி காலை… இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கம் போல எழுந்து தங்கள் வேலைகளுக்குச் செல்ல வெளியே வந்திருக்கிறார்கள். வந்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி..

அவர்கள் ஊரில் இருந்த சாலையை காணோம்! சுமார் அரை கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலையில் கான்கிரீட் பெயர்த்து எடுக்கப்பட்டிருந்தது!

முதலில், “ அறிவிக்காமலேயே, சாலை பராமரிப்பு வேலை ஏதும் நடந்திருக்குமோ” என்று நினைத்தனர். ஆனால் அப்படியே ஏதும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினருக்கு இந்தப் புகார் புதுவிதமாக இருந்தது. பதறிப்போய் விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில் ஷூ என்பவர் சாலையை திருடியிருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரித்தனர். அவர், “நான்தான் அரை கிலோமீட்டருக்கு சாலையை பெயர்த்தெடுத்தேன். கல் தொழிற்சாலை ஒன்று சிமென்ட் காங்கிரீட்களை வாங்குவதாக கூறியது. இதையடுத்து துளையிடும் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து சாலையை சதுரம் சதுரமாக வெட்டி, லாரியில் ஏற்றி அங்கு கொண்டு சென்றேன்.

ஒரு இரவில் அரை கி.மீ சாலையைதான் வெட்டி எடுக்க முடிந்தது. அதற்குள் விசயம் வெளியே தெரிந்து சிக்கிக்கொண்டேன்” என்று மிக வருத்தத்துடன் (!) சொல்லியிருக்கிறார்.  அந்த ஆசாமி. புதுசு புதுசாத்தான் யோசிக்கிறாங்க!