பீஜிங்: சீனாவில் வாழும் அனைத்து தரப்பு மக்களையும் சீன கலாச்சார வட்டத்திற்குள் கொண்டுவரும் வகையில், சீன அரசு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தலைநகரிலுள்ள குறிப்பிட்ட கடைகள் மற்றும் ஹோட்டல்களின் பெயர் பலகைகளில் இடம்பெற்றிருக்கும் பிறை அடையாளம், அரபு மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஹலால் எனும் சொல் ஆகியவற்றை நீக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு சீன அதிகாரிகள் உத்தரவிட்டு வருகிறார்கள்.

அதாவது, இஸ்லாமிய அடையாளத்தை அழித்து, முற்றிலும் சீன அடையாளத்தைக் கொண்டுவரும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சீனாவில் மத சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அங்கே கம்யூனிச கருத்தாக்கத்தின் மீதான விசுவாசம்தான் முக்கியம்.

சீனாவில் தற்போது 2 கோடி முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். பெயர் பலகைகள் மாற்றம் மட்டுமின்றி, மசூதிகளை மத்தியக் கிழக்கின் கூம்பு வடிவிலிருந்து சீன கட்டடக் கலை பாணியைப் பின்பற்றவும் வலியுறுத்தப்படுகிறது.

அதேசமயம் இந்த உத்தரவு இன்னும் முழுவதும் பரவலாக்கப்படவில்லை. பல கடைகளின் பெயர் பலகைகள் இன்னும் மாற்றமடையவில்லை. சீனாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் உய்குர் பகுதியில் பல தொடர்ச்சியான பிரச்சினைகள் ஏற்பட்டு வருவது நாம் அறிந்ததே.