கொழும்பு

சுமார் 5000 வருடங்களுக்கு முன்பே ராவணன் விண்வெளி பயணம் செய்ததாக இலங்கை அரசு புகழாரம் சூட்டி உள்ளது.

இலங்கை அரசு சமீபத்தில் தனது முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.  அதற்கு  ராவணன் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.   இலங்கை மக்கள் ராவணனை மிகப் பெரிய அறிஞர் எனவும் வல்லமையான அரசர் எனவும் புகழ்ந்து வருகின்றனர்.  இந்தியாவின் சில பகுதிகளிலும் அவரை மகா பிராமணர்  என புகழ்ந்து வருகின்றனர்.   இதற்கு மிகப்பெரிய பிராமணர் அல்லது பேரறிஞர் எனப் பொருள் கொள்ளலாம்.

தற்போது இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அரசின் விமானப் பயணத்துறை துணைத் தலைவர் சசி தனதுங்கே, “ராவணன் ஒரு புத்திசாலி அரசர்.  அவர் முதலில் விண்வெளியில்  பயணம் செய்துள்ளார்.  இது புராணக் கதை இல்லை.  இது உண்மைத் தகவல்.   இதற்கான ஆய்வு ஒன்றைத் தொடங்க உள்ளோம்.  இன்னும் ஐந்து வருடங்களில் நாங்கள் இதை நிரூபிப்போம்.

இதற்காக விமான பயண ஆய்வாளர்கள், சரித்திர ஆசிரியர்கள், ஆய்வாளர்கள்,  விஞ்ஞானிகள் ஆகியோரை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.  ராவணன் 5000 வருடம் முன்பு இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு விமானப்பயணம் சென்று திரும்பி உள்ளார்.  அவர் உபயோகித்த தொழில்நுட்பம் குறித்தும் இந்தக் குழு ஆய்வு நடத்தும். ”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நடந்த கூட்டத்தில் இந்த ஆய்வு பற்றி விவாதம் நடத்தப்பட்டுள்ளது.  ஆனால் ராவணனின் கதையை உண்மை எனக் கூறி ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறியவர்களில் யாரும் அவர் ராமனின்  மனைவி சீதையைக் கடத்திச் சென்றதை ஒப்புக் கொள்ளவில்லை.   அது இந்தியாவின் கூற்று எனவும் உண்மையில் ராவணன் ஒரு புனிதமான அரசன் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.