பீஜிங்

கொரோனா வைரஸால் சீனாவில் 31000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் 636 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ  தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது கண்டறியப்பட்டது.    அந்த வைரஸ் தற்போது சீனா எங்கும் பரவி உள்ளது.   இந்த வைரஸ் பரவுதலும் இதனால் மரணம் அடைவோர் எண்ணிக்கையும் ஆரம்பத்தில் மிகவும் குறைவாக இருந்தது.  தற்போது இவை மிகவும் அதிகரித்து வருகிறது.

சீனா நாட்டின் தேசிய சுகாதார ஆணையம், “கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   நேற்று மட்டும் 3143 புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 31,361 ஐ எட்டியுள்ளது.  சீனாவில் உள்ள 31 மாகாணங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர்.  நேற்றைய நோயாளிகளில் 19 பேர் வெளிநாட்டினர் ஆவார்கள்.

இந்த வைரசால் நேற்று மட்டும் 73 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் வுகான் நகரப் பகுதியில் 69 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதைத் தவிர ஜிலின், ஹெனன், குவாண்டாங்மற்றும் ஹைனான் பகுதிகளில் தலா ஒருவர் மரணம் அடைந்துள்ளனர்.   நேற்று வரை மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 636 ஆகி உள்ளது.

நேற்று வுகான் நகரில் மரணம் அடைந்தவர்களில்  டாக்டர்லி வென்லியாங் என்னும் 34 வயது இளைஞரும் உள்ளார்.   இவர் கடந்த டிசம்பர் மாதம்  இந்த வைரஸ் குறித்த எச்சரிக்கை எழுப்பிய எட்டு பேரில் ஒருவர் ஆவார்.

இதுவரை 1540 பேர் சிகிச்சையில் குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  இந்த வைரஸ் சிகிச்சைக்காக ஏற்கனவே 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும் தனிமை அறைகளையும் அரசு வுகான் நகரில் திறந்துள்ளது.  தற்போது 1500 படுக்கைகள் கொண்ட மற்றொரு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளது.