ஷாங்காய்: நம்மூரில் கிளி ஜோசியம் போல சீனாவில் குரங்கு ஜோசியம் பிரபலம். தீர்க்கதரிசிகளின் அரசன் என்று வர்ணிக்கப்படும் கேடா என்ற ஒரு குரங்கு டொனால்டு ட்ரம்ப்தான் அடுத்த அமெரிக்க அதிபராக வருவார் என்று ஜோசியம் கூறியுள்ளது.

monky

விலங்குகளை வைத்து விளையாட்டுப் போட்டிகளையும், தேர்தல் முடிவுகளையும் கணிக்கும் பழக்கம் இப்போது வெளிநாடுகளில் பரவிவருகிறது. இதற்கு முன்னால் 2010-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து முடிவுகளை பால் என்ற பெயருடைய ஒரு ஆக்டோபஸ் சரியாக முன்னறிவித்து உலகப்புகழ் பெற்றது.
தற்போது அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்ற ஜூரம் உலகம் முழுவதும் பரவிவரும் வேளையில், இந்த கேடா குரங்கை வைத்து முடிவை கண்டுபிடிக்க சீனாவில் ஒரு முயற்சி நடைபெற்றது. டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரின் கட் அவுட்களை வைத்து இருவரில் ஒருவரை தெரிந்தெடுக்கும் படி கேடாவிடம் சொன்னபோது அது ஓடோடிச் சென்று டொனால்ட் ட்ரம்ப்பின் கட்டவுட்டை கட்டி அணைத்து உதடோடு உதடு வைத்து முத்தமிட்டதாம். ஏற்கனவே டொனால்ட் ட்ரம்ப்பை வறுதெடுக்கும் வலைதளவாசிகள் இந்த சம்பவத்தை சகிட்டுமேனிக்கு கிண்டல் செய்து வருவது தனிக்கதை.
ஐந்து வயதான இந்த கேடா குரங்கு ஏற்கனவே இவ்வாண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் கால்பந்தாட்டப் போட்டியின் வெற்றி பெறும் அணியை சரியாக கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டியில் பங்கேற்ற பிரான்ஸ் மற்றும் போர்சுக்கல் இரு நாட்டு கொடிகளையும் நட்டு வைத்து இரு கொடிகளின் அருகேயும் ஒரு வாழைப்பழத்தை வைத்தபோது கேடா சரியாக போர்சுக்கல் நாட்டு கொடியருகே வைத்திருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டது. அது முன்னறிவித்தவாறே போர்ச்சுகல் வெற்றி பெற்றது.
உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் கருத்துக் கணிப்புகள் ஹிலாரி கிளிண்டனுக்கே சாதகமாக இருக்கின்றன. கருத்துக்கணிப்புகளை குரங்கு ஜோசியம் பொய்யாக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்!