பெய்ஜிங்:

அமெரிக்காவின் புதிய வர்த்தக கொள்கைக்கு சீனாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இறைச்சி, ஆப்பிள் உள்ளிட்ட பொருடகளுக்கு சீனா வரியை உயர்த்தியுள்ளது.

இது குறித்து சீனா அதிபர் ஜி ஜின்பிங் அரசு கூறுகையில்,‘‘ சீனாவின் ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்கா வரியை உயர்த்தியதன் எதிரொலியாகவே இத்தகைய நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன பொருட்களுக்கு 5 ஆயிரம் கோடி டாலர் வரையிலான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. சீனாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை சீனா திருடுகிறது அல்லது தொழில்நுட்பத்தை அழுத்தம் கொடுத்து வாங்குகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் பன்றி இறைச்சி, ஆப்பிள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதி வரியை சீனா இன்று உயர்த்தி அறிவித்தது. இருநாட்டு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் காரணமாக டோக்கியோ, ஷாங்காய் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. இந்த தாக்கம் அளவோடு இருக்க வேண்டும். இன்னும் இதர நாட்டு அரசுகளும் இறக்குமதி வரியை உயர்த்தினால் உலகளவில் வீழ்ச்சி ஏற்படும் என்று முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

‘‘இறக்குமதி வரியை உயர்த்துவது என்பது நல்ல அறிகுறி கிடையாது. ஒவ்வொரு நாடுகளும் தங்களை பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கை இது’’ என்று பொருளாதார வல்லுனர் தைமூர் பைய்க் தெரிவித்துள்ளார். ‘‘சீனா-அமெரிக்கா இடையிலான ஆண்டு இறக்குமதி வர்த்தகம் ஆயிரத்து 500 டாலராகும். அதனால் வர்த்தக ரீதியில் பார்த்தால் இது கணிசமான உயர்வு தான்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த நடவடிக்கை அமெரிக்கா பண்ணை தொழிலை அதிகளவில் பாதிக்கும். இவர்களில் பெரும்பாலானவர்கள் 2016ம் ஆண்டு தேர்தலில் டிரம்புக்கு வாக்களித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.