பெய்ஜிங்:

வங்கிகளில் கடன் வாங்க நடையாய் நடந்து வெற்றி பெறுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு இந்திய வங்கிகளில் சாமானியர்கள் கடன் பெறுவது குதிரை கொம்பாக தான் இருந்து வருகிறது. ஆனால், பண பலம், பதவி பலம், ஆள் பலம், சீன், பில்டப் ஆகிய தகுதிகளோடு, மேலும் சில அந்தரங்க வேலைகளையும் செய்து வங்கிகளிடம் கடன் பெறுவோர் எண்ணிக்கை தான் இந்தியாவில் அதிகம்.

இவ்வாறு வாங்கியவர்கள் வங்கிக்கு ‘திருப்பி செய்ய வேண்டியதை நன்றாக செய்து கொண்டிருப்பதை’ பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதற்கு உதாரணமாக இருப்பவர் விஜய் மல்லையா. இந்தியாவில் தான் இந்த நிலை.

ஆனால் சீனாவில் இதற்கு நேர்மறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு மொத்தம் 6.7 மில்லியன் பேர் வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை. வராக் கடனாளிகளான இவர்களது பெயர்களை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது அந்நாட்டு உச்சிநீதிமன்றம்.

இவர்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியாது. கடன், கிரெடிட் கார்டுகள் வாங்க முடியாது. பதவி உயர்வு கிடைக்காது போன்று எண்ணற்ற தடைகளை விதித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 6.15 மில்லியன் பேர் விமான டிக்கெட்கள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2.22 மில்லியன் பேர் அதிவிரைவு ரயில்களில் பயணம் செய்ய முடியாது. அவர்களது அடையாள அட்டை, பாஸ்போர்ட் அடிப்படையில் ரயில்வே நிர்வ £கமும், விமான நிறுவனங்களும் இந்த ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

71 ஆயிரம் பேர் கார்பரேட் நிறுவனங்களில் பிரதிநிதி மற்றும் நிர்வாகிகளாக பணியாற்ற முடியாது. 5.50 லட்சம் வராக் கடனாளிகளின் கிரெடிட் கார்டு விண்ணப்பங்களை தொழில் மற்றும் வணிக வங்கி நிராகரித்துள்ளது. அரசு ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் ஆலோசனை குழு, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிலரும் இந்த பட்டியலில் உள்ளனர். அவர்களை உடனடியாக பதவி நீக்கம் அல்லது நீக்கம் செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய நடவடிக்கையை தொடர்ந்து சுமார் ஒரு மில்லியன் பேர் தானாக முன் வந்து நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதை இந்தியாவு பின்பற்றினால் விஜய் மல்லையா போன்ற ஏமாற்று ஆசாமிகளிடம் பணத்தை வசூல் செய்யலாம்.