அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்தில் கூண்டுக்குள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த 28 வயது சிம்பன்ஸி குரங்கு முதல் முறையாக கூண்டுக்குள் இருந்து வெளியே வந்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது.

வனவிலங்குகளை கொண்டு ஆய்வு செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து வெண்ணிலா என்று பெயரிடப்பட்ட இந்த சிம்பன்ஸி இன குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்களை சரணாலயத்தில் விட பரிசோதனைக் கூட அதிகாரிகள் தீர்மானித்தனர்.

 

சிம்பன்ஸி ‘வெண்ணிலா’-வுக்கு ஏற்ற இடம் கிடைக்காத நிலையில் தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வன விலங்கு சரணாலயத்தில் அதற்கு இடம் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கலிபோர்னியா வழியாக குளீரூட்டப்பட்ட லாரியில் அனுப்பிவைக்கப்பட்ட வெண்ணிலா புளோரிடா சரணாலயத்தில் சில நாள் தனிமைப் படுத்தலுக்கு பின் சமீபத்தில் கூண்டை விட்டு திறந்துவிடப்பட்டது.

மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்த ‘சேவ் தி சிம்பஸ்’ என்ற இந்த சரணாலயத்தில் முதலில் வெளியே வர பயந்து கூண்டின் மீது அமர்ந்திருந்த இந்த குரங்கை அங்கு ஏற்கனவே இருக்கும் மற்றொரு ஆண் குரங்கு கையைப் பிடித்து வெளியே அழைத்து வந்தது.

ஆண் சிம்பன்ஸி துணையுடன் வெளியில் வந்த வெண்ணிலா முதல் முறையாக உலகத்தைப் பார்த்த சந்தோசத்தில் துள்ளி குதித்து எக்காளம் போட்டது.

இதை அந்த சரணாலய நிர்வாகம் வீடியோ-வாக படம்பிடித்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.