சென்னை: குழந்தை கை இழந்த விவகாரம் தொடர்பாக அமைத்த விசாரணை குழுவினரின் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், கிருமி பாதிப்பால்தான்,  குழந்தையின் கையில் ரத்தஓட்டம் பாதிக்கப்பட்டு அழுகியதாகவும், உயிரை காப்ற்றும் முயற்சியில்தான் குழந்தையின் கை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகவும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்குழுவினரின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வேறொரு நோய்க்காக சிகிச்சைபெற்றுவந்த குழந்தையின் கை பாதிக்கப்பட்ட நிலையில், அந்த குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அழுகிய கையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவனக்குறைவான சிகிச்சையின் காரணமாகவே குழந்தையின் கை அகற்றப்பட்டிருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி வார்டில் இருந்த நர்சின் அலட்சியமே காரணம் என்று குழந்தையின் தாய் அஜிஷா குற்றம்சாட்டி இருந்தார் சிகிச்சையின்போது கையில்  ஏற்றப்பட்ட ஊசி மருந்தால்தான் குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3  மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு  அமைத்து விசாரணை நடத்த  உத்தரவிட்டார். அதன்படி, விசாரணை குழு நேற்று தனது விசாரணையை தொடங்கியது. மருத்துவர்கள், செவிலியர்கள், குழந்தையின் பெற்றோர் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்.

முதலாவதாக குழந்தையின் தாய் அஜிஷாவிடம் விசாரணை நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1 மணி வரை நடைபெற்றது. அவரிடம் வார்டில் நடந்தவைகள் குறித்தும், எப்போதில் இருந்து குழந்தைக்கு பிரச்சினை ஏற்பட்டது என்பது உள்ளிட்ட மொத்தம் 3 பக்கங்களில் 21 கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்விகள் அனைத்திற்கும் அஜிஷா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

இந்த நிலையில், மருத்துவ குழுவினர் அளிக்க‘விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.  குழந்தையின் கையில்,  ரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை. Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விசாரணை குழுவின் அறிக்கையில், குறைப் பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தை எடை குறைவாக இருந்ததுடன், இதயத்தில் ASD எனும் ஓட்டையுடனும், மூளை மண்டலத்தில் நீர் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு தலை வீக்கத்துடனும் அவதியுற்றதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதற்காக அந்த குழந்தை 5 மாதமாக இருக்கும் போதே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூளை மண்டலத்தில் இருந்து வயிற்றுப் பகுதிக்கு பொருத்தப்பட்ட நுண்ணிய குழாய், ஆசன வாய் வழியே வெளியேற தடைப்பட்டதால், சுமார் ஓராண்டு கழித்து தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் அந்த நுண்ணிய குழாய் பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்ததாகவும்,  அதுபோல குழந்தைக்கு மூளையில் நுண்கிருமித் தொற்று இருந்ததாகவும், அதனால், அந்த குழந்தையின்  ரத்த நாள அடைப்பால் கை பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அந்த கையை  எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும்  தெரிவித்து உள்ளது.

மேலும்,   குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே கால தாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.Venflon ஊசி தமனியில் போடப்பட வில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. Venflon ஊசி தமனியில் போடவில்லை என்பது பெற்றோர் மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலம் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மருந்து கசிவால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

குழந்தையின் வலது கையில் வலி மற்றும் நிற மாற்றம் ஏற்பட்ட பின் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துள்ளனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் Thrombophlebitis என்று கணித்து சிகிச்சை அளித்துள்ளார். ரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை. Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றும் முயற்சியில் குழந்தையின் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று மருத்துவ குழுவினரின் விசாரணையை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாய்  பேசும்போது, “சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலை 10 மணிக்கு விசாரணை என்று அழைத்தனர் விசாரணை நல்லபடியாக முடிந்தது. எந்த தேதியில் எதனால் இந்த பிரச்னை ஆரம்பித்தது என்று கேட்டார்கள் நாங்களும் பதில் அளித்தோம்.

ஜூன் 29-ஆம் தேதி ஊசி போட்ட பிறகுதான் குழந்தைக்கு பிரச்சனை ஏற்பட்டது. அன்றே செவிலியரிடம் நான் சொன்னேன். வலது கை விரலில் கருஞ் சிவப்பாக மாறி இருந்தது. மருத்துவர் மற்றும் செவிலியர் அலட்சியத்தால்தான் என் மகன் வலது கையை இழந்திருக்கிறான். யாரும் இந்த தவறை மறந்துகூட செய்யக்கூடாது. விசாரணை திருப்திகரமாக இருந்தது. அனைவரையும் விசாரித்துவிட்டு பதில் அளிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

என் மகனுக்கு நடந்த அநீதி போல் யாருக்கும் நடக்கக்கூடாது. என் மகனுக்கு தமிழக அரசு பதில் சொல்லியாக வேண்டும் அதுவரை என் போராட்டத்தை தொடருவேன். என்று தெரிவித்தார்.