அயோத்தி
அயோத்தியில் பக்தர்களைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் காரணமாகக் குழந்தை ராமர் சிலை ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் 22 ஆம் தேதி அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுவரும் ராமர் கோவிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அப்போது கருவறையில் ‘பால ராமர்’ (குழந்தைப் பருவத்தில் ராமர்) சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நிக்ழ்ச்சியில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ராமர் கோவிலில் 2 ராமர் சிலைகள் வைக்கப்படுகின்றன. ஒரு சிலை ஏற்கனவே அங்கு கடந்த 1949-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிலையாகும். இந்த சிலை உற்சவர் சிலையாக இருக்கும்.. மூலவர் சிலை தேர்வுக்குக் கடந்த 29-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகி ராஜ் வடித்த சிலை தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 22ஆம் தேதி இந்த சிலை அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது., கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலையைக் காண மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.
வட மாநில மக்கள் மத்தியில் அந்த குழந்தை ராமர் சிலை எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுவதால் மூலவர் ராமர் சிலையை வருகிற 17 ஆம் தேதி உலகுக்குக் காட்ட ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை முடிவு செய்தது. அன்று குழந்தை ராமர் சிலை அயோத்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது 17 ஆம் தேதி அயோத்தியில் நடைபெறவிருந்த குழந்தை ராமர் சிலை ஊர்வலத்தை ராம ஜென்ம பூமி அறக்கட்டளை ரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக, அதே நாளில் ராம ஜென்ம பூமியின் வளாகத்தில் குழந்தை ராமர் சிலையைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்படும் என்று அறக்கட்டளையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அயோத்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவிருக்கும் குழந்தை ராமர் சிலையைத் தரிசனம் செய்ய அதிக அளவில் வரும்போது, பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் ஊர்வலம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.