திருவனந்தபுரம்

கேரள உயர்நீதிமன்றம் பாஜகவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன் வழங்கி உள்ளது, 

கடந்த சில வாரங்களுக்கு முன் கேரளாவில் பிரபல நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான சுரேஷ் கோபி, கோழிக்கோட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவர் அப்போது பெண் பத்திரிகையாளர் தோளில் கையை வைத்ததால் தன்னை அவமதித்ததாகவும், தவறான நோக்கத்துடன் தன் மீது கை வைத்ததாகவும் பெண் பத்திரிகையாளர் தெரிவித்தார்.

சுரேஷ் கோபி தனது மகள் வயதுடைய பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றும், அவரிடம் மன்னிப்பு கோருவதாகவும் பி கூறினார். ஆயினும், பெண் பத்திரிகையாளர் கோழிக்கோடு நடக்காவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.   அந்த புகாரின் அடிப்படையில் நடிகர் சுரேஷ் கோபி மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வரும் 17 ஆம் தேதி சுரேஷ் கோபியின் மகள் திருமணம் நடைபெறுகிறது. இதனால் முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த தனி அமர்வு நீதிபதி சுரேஷ்குமார், இதுகுறித்து மாநில அரசு தனது கருத்தினை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

அரசு தரப்பில் இந்த வழக்கில் சுரேஷ் கோபியைக் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று  தெரிவிக்கப்பட்டது. இதைத்  தொடர்ந்து நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.